திருவிடைமருதூர்
வெப்பம் குறைந்து மழை பெய்ய சர்வ சமய பிரார்த்தனைக்கு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தன்வந்திரி ஆரோக்கிய பீட முரளீதரசுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை மகாலிங்கர் கோவிலுக்கு வருகை தந்த வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீட ஸ்தாபகர் முரளீதரசுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அன்னதான திட்டம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் எனது தாயை குருவாக கொண்டு அமைக்கப்பட்டது தன்வந்திரி ஆரோக்ய பீடம். இங்கு 65 சன்னதிகள், 468 சித்தர்களை சிவலிங்கங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் கோவில்களுக்கு சென்று தரிசித்தேன். தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்க சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல அரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பக்தர்கள் பயன்பாட்டுக்காக ஆலயங்கள் தோறும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளார்.
வறட்சி
தமிழக முதல்– அமைச்சரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலவுகிறது. இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மட்டுமின்றி, தனியார் கோவில்கள், மடங்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாள், நேரத்தை அறிவித்து அவரவர் மத முறைப்படி அந்தந்த இடங்களில் உலக நன்மைக்காக ஹோமங்கள், யாகங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், தொழுகைகள், பிரார்த்தனைகள் என அனைவரும் அவரவர் மத முறைப்படி நடத்த தமிழக அரசு அறிவிக்கவேண்டும். இதனால் நாட்டில் வெப்பம் குறைந்து மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும். இது மத நல்லிணக்கத்துக்கும்,
மனிதநேயத்துக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி தினத்தந்தி, தஞ்சாவூர் பதிப்பு. 11.05.2013
- நன்றி தினத்தந்தி, தஞ்சாவூர் பதிப்பு. 11.05.2013
No comments:
Post a Comment