Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 4, 2013

ஹோமங்கள் தொடர் கட்டுரை பாகம் 1




நலம் தரும் ஹோமங்கள்!     பாகம் - 1

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

நல்வாழ்க்கை நாம் வாழ்வதற்கு தர்ம சிந்தனை, பொறுமை குணம், சகிப்புத் தன்மை போன்றவை எப்படி அவசியமோ, அதுபோல் இறை வழிபாடும் அவசியம் தேவை. 

இறை பக்தி இல்லாத வாழ்க்கை, நிலவில்லாத வானம் போல்! மீன் இல்லாத கடல் போல்! அப்படிப்பட்ட வாழ்க்கையை & அதாவது இறை பக்தி இல்லாத ஒரு வாழ்க்கையை ஒருவர் வாழ நேர்ந்தால் அதனால் எந்தப் பலனும் அவருக்கு இல்லை. 

கடந்த பிறவியில் செய்துள்ள நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜீவனும் அதற்குரிய பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும். அதன்படி அனுபவித்து வருகின்றன. இது நியதி. என்றாலும் & ஈடில்லாத இறை பக்தியினாலும், தயாள குணத்தினாலும், வாழுகின்ற முறையினாலும் தீவினைகளின் கெடுபலன்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். இது சர்வ நிச்சயம்.

எனவே, வாழுகின்ற இந்தக் காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய தீவினைகளை ஓரளவு குறைப்பதற்கு இறைவனை வழிபட்டே ஆக வேண்டும். அவனது அருளுக்குப் பாத்திரம் ஆக வேண்டும். எங்கும் நிறைந்துள்ள இறைவனை நாம் வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன.

சங்கீதம், நாம கோஷம், அர்ச்சனை, அபிஷேகம், ஜபம் & இப்படிப் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு வழிபாட்டு முறை & ஹோமம் செய்வது.

ஹோமங்கள் மூலமாக நமது பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஹோமங்களில் ஒரு தூதுவராகச் செயல்படும் அக்னி பகவான்தான் நமது கோரிக்கைகளை & எந்தெந்த தேவதைகளுக்கு வைக்கிறோமோ & அந்தந்த தேவதைகளிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கிறார்.

எனவேதான், வாலாஜாவில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் துவங்கிய காலத்தில் இருந்தே ஹோமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அக்னி பகவானின் வாசம் இல்லாத நாளே இங்கு இல்லை. தினம்தோறும் ஹோமங்கள். தங்களுக்கு நேர்ந்த பல விதமான பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, இந்த ஆரோக்ய பீடம் தேடி வருகிறார்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குகிறார்கள். என்ன ஹோமம் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ, அந்த ஹோமம் செய்து செல்கிறார்கள்.

‘யக்ஞ பூமி’ என்று சொல்லும் அளவுக்கு இதுவரை இங்கே பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீட யாக சாலையில் ஆண்டு முழுதும் ஐஸ்வர்யத்துடன் ஆயுள் பலம் பெற அபூர்வமான பல யாகங்கள் நடந்து வருகின்றன. இந்த யாகங்களுக்கு ஏற்ற வகையில் விசேஷமான சந்நிதிகளும் இங்கே அமைந்திருப்பது சிறப்பு.

வாழ்வில் வளமும் நலமும் பெறுவதற்கு இந்த ஹோம வழிபாடு உதவுகிறது. 
உலக மக்களின் உடல் நலம், மன நலம் கருதியும், இயற்கைச் சீற்றம், பேரிடர்கள், கடல் கொந்தளிப்பு போன்ற பேராபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், உலக மக்களின் தேவைகளான திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நிரந்தர உத்தியோகம், கல்வி, குடும்ப க்ஷேமம், கடன் நிவாரணம், நோய் நிவாரணம், மன அமைதி, மன சாந்தி, ஆடை அணிகலன்கள் போன்றவற்றைப் பெறவும், துர் மரணம், விபத்துக்கள், வறுமை போன்றவற்றைத் தவிர்க்கவும், கொடிய வியாதிகளால் துன்பம் ஏற்படும்போதும், கிரகங்களின் பெயர்ச்சியினாலும் சுழற்சியினாலும் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னைகள் தீரவும், தம்பதிகளின் ஒற்றுமை, தாம்பத்ய அந்யோன்யம் வேண்டியும், சகல பாபங்களிலிருந்து விடுதலை பெறவும், சகல காரிய ஸித்தி அடையவும், லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் இருக்கவும், இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் கருதியும், நல் பழக்க வழக்கங்கள் வளரவும், அவர்களிடம் பாசம், நேசம், பக்தி போன்றவை சிறக்கவும் இத்தகைய ஹோமங்கள் மாபெரும் தூண்டுகோல் சக்தியாக அமையும்.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடக்கும் ஹோமங்களுக்கு பெரும் சிறப்பு உண்டு. காரணம் & இங்கே இருக்கின்ற யாகசாலையில் ‘அணையா அக்னி’ என்றென்றும் வாசம் செய்து கொண்டிருக்கிறது. பீடம் துவங்கிய நாளில் ஏற்றப்பட்ட யாகசாலை அக்னி, இன்றளவும் விடாமல் தன் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது. 

எத்தனை விதமான ஹோமங்கள் இன்று புழக்கத்தில் இருந்து வருகின்றன என்று பட்டியல் போட முடியாது. அந்த அளவுக்கு ஹோமங்களின் பட்டியல் வெகு நீளம்.

தடைகள் நீங்குவதற்கு கணபதி ஹோமம், ஆயுள் விருத்திக்கு ம்ருத்யஞ்ஜ ஹோமம், செல்வ விருத்திக்கு லட்சுமி ஹோமம், கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்யா ஹோமம், தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு கனகதாரா ஹோமம், நிலம் தொடர்பான பிரச்னைகள் அகல்வதற்கு வாஸ்து ஹோமம் என்று ஏராளம் இருக்கின்றன.

எந்த ஒரு ஹோமம் துவங்கப்படுவதற்கு முன்பாக, எல்லாவற்றுக்கும் மூல முதல்வனாக இருக்கிற கணபதி பெருமானை வணங்க வேண்டும். அவரை வணங்கி ‘கணபதி ஹோமம்’ நடத்தி, அந்த விக்னேஸ்வரனின் அருளைப் பெற வேண்டியது அவசியம். 

விநாயகருக்கு மட்டும் தனியாக ஹோமம் செய்ய விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சதுர்த்தி தினங்களில் அதிகாலையில் ஹோமம் செய்யலாம்.

பண்டைய காலங்களில் உலக நன்மைக்காகவும், இயற்கையை வணங்கி வழிபடுவதற்கும் அரசர்களாலும், மிராசுதார்களாலும் ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இன்றைய தினத்தில் தனிப்பட்டவர்களின் நலனுக்காக ஹோமங்கள் செய்வது பெருகி இருக்கிறது.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment