Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 4, 2013

ஹோமங்கள் தொடர் கட்டுரை பாகம் 5



நலம் தரும் ஹோமங்கள்!     பாகம் - 5

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்


இன்றைக்கு ஹோமங்கள் நடக்கின்ற இடங்களில் பக்தர்கள் அதிகம் கூடுவதற்குக் காரணம் & அவர்களது கோரிக்கைகள், வேண்டுதல்கள் போன்றவற்றை அந்த இடத்தில் வைத்துப் பிரார்த்திக்கும்போது சம்பந்தப்பட்ட தெய்வத்தால் அவை நிறைவேற்றப்படுகின்றன என்கிற நம்பிக்கைதான்.

ஹோமத்தில் கலந்து கொள்பவர்கள் என்ன கோரிக்கையை & ஹோமத்துக்கு உரிய தெய்வத்திடம் வைத்து அங்கே சங்கல்பம் எடுத்துக் கொள்கிறார்களோ, அந்தக் கோரிக்கைகள் உரிய தெய்வத்திடம் அக்னி பகவானால் எடுத்துச் செல்லப்படுகின்றன. தன்னைத் துதித்து, ஒருவர் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக ஹோமம் செய்திருக்கிறார் என்று அந்த தெய்வம் மகிழும். 

அதன் பின், ஹோமத்தில் கலந்து கொண்டவர் எந்த அளவுக்கு ஆத்ம ஸுத்தியுடன் இதில் பங்கு கொண்டார் என்பதைப் பொறுத்து தெய்வத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

ஒரு ஹோமம் யாருக்காக ஹோமம் செய்யப்படுகிறதோ & யாருடைய பிரார்த்தனையை முன்வைத்துச் செய்யப்படுகிறதோ, அதாவது எஜமானர் மட்டும் சுத்தபத்தமாக இருந்தால் போதாது. ஹோமத்த்துக்குப் பொறுப்பேற்று நடத்துகிற வேத விற்பன்னர்களும், ஆசார & அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். 

ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கும், ஹோமம் நடத்துகிற வேத பண்டிதர்களுக்கும் முதலில் பரிபூரண இறை நம்பிக்கை வேண்டும். இந்த ஹோமம் செய்வதன் மூலம் நமக்கு இன்னின்ன பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்று அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உறுதியுடன் செய்யப்படுகிற எந்த ஒரு செயலும் எவரையும் ஏமாற்றாது. நம்பிக்கை இல்லாமல் செய்கிற செயல்களில், நமக்குப் பலன் கிடைக்காது என்பது உலகறிந்த ஒன்று. 

அக்னியை உருவாக்கி, அடுப்பில் அரிசியையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அது சாதம் ஆகிறது அல்லவா? எப்படி? நெருப்பு பிரகாசமாக ஜ்வலிக்கும்போது தண்ணீரில் இருக்கிற அரிசி வெந்து, சாதமாகிறது. இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். 

அதுபோல், எந்த தேவதையைக் குறித்து ஹோமம் செய்யப்படுகிறதோ, அந்த தேவதைக்கு உண்டான மந்திரங்களையும், ஆஹுதிகளையும், சமித்துக்களையும் நெருப்பில் இட்டுச் செய்யப்படும்போது அதற்குண்டான பலன் நமக்குக் கிடைக்கும். நாம் கொடுப்பது, நமக்கே திரும்ப வரும். தெய்வங்கள் நம்மை ஏமாற்றாது.

அக்னியை வளர்த்து, அதில் நெய்யை விட்டு, சமித்துக்களையும் மூலிகை திரவியங்களையும் போட்டு நடத்தப்படும் யாகத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையும் பாதுகாக்கப்படுகிறது. அதாவது, ஹோமத்தின் மூலம் விஞ்ஞானபூர்வமான பலன்களும் நமக்குக் கிடைக்கின்றன. 

உலகில் இன்று இருக்கிற ஒவ்வொரு தேசத்திலும் முறையாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, அவ்வப்போது பிரமாண்ட அளவில் ஹோம காரியங்கள் நடத்தப்பட்டு வந்திருக்குமானால், இன்று உலகின் சுற்றுச்சூழலுக்கு ஒரு கேடு வந்திருக்காது. பூமிப் பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு செயல் என்றாலும், அதில் முழுமையாக நாம் அக்கறை செலுத்தினால்தான் வெற்றி அடைய முடியும்.
அது போல் ஒரு ஹோமம் நடத்துகிறோம் என்றால், அந்த ஹோமம் நடத்துவதற்கு ஆகமத்தில் என்னென்ன வழிமுறைகள், விதிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்து அறிந்து அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

அந்த ஹோமத்துக்கு என்னென்ன திரவியங்கள் தேவை என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அதன்படி அந்தந்த திரவியங்களை அதற்குரிய இடத்தில் சேகரித்து, அக்னி பகவானுக்கு ஆஹுதியாக செலுத்த வேண்டும். சமித்துக்களிலும் பெரும்பாலும் மாற்று சமித்துக்களைத் தேடக் கூடாது. என்ன சமித்துக்கள் தேவை என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அவற்றைத் தேடி அலைந்து வாங்கி, ஹோமத்தில் செலுத்த வேண்டும்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நித்தமும் நடக்கின்ற ஹோமங்களில் அர்ப்பணிக்கப்படுகிற திரவியங்களுக்கும் சமித்துக்களுக்கும் குறைவே இல்லை. ஒவ்வொரு ஹோமத்திலும் அதிக அளவிலான மூலிகை திரவியங்களையும், அபூர்வமான சமித்துக்களையும் பயன்படுத்தி வருகிறோம். காரணம் & அந்த மூலிகைகள் ஹோமத் தீயில் பொசுங்கி, அதில் இருந்து வெளிப்படுகிற புகையானது இந்த யக்ஞ பூமி முழுதும் பரவி நிற்பதால், உடல்நிலை மற்றும் மன நிலை பாதிப்போடு இங்கு வருகிற பலரும் ஆரோக்கியம் பெறுகிறார்கள்; நிவாரணம் அடைகிறார்கள்.

தற்போது பல மூலிகைச் செடிகள் ஆரோக்ய பீடத்திலேயே விரிவான இடத்தில் பயிரிட்டு வளர்க்கப்படுவதால், ஒரு சில சமித்துக்களையும், திரவியங்களையும் இங்கேயே சேகரித்துக் கொள்கிறோம். ஹோமத்துக்குத் தேவையான பிற பொருட்களை இதற்கென பிரத்தியேக உள்ள பாரம்பரிய கடைகளில் வாங்கப்படுகிறது.

எதிர்காலத்தில் எந்த ஒரு தேவையையும் ஆரோக்ய பீட வளாகத்தில் இருக்கின்ற மூலிகை வனத்தில் இருந்தே பெறும் எண்ணமும் இருக்கிறது. இங்குள்ள மூலிகை வனம் உள்ளே நுழைபவர் ஒவ்வொருவரின் கவனத்தையும் கவரும். இதற்குள் நுழைந்தால், மூலிகைச் செடிகளின் காற்று பக்தர்களைப் பரவசப்படுத்தும். பல்வேறு வியாதிகளைத் தீர்க்கும் விதமாக இந்த மூலிகை வனத்தில் அபூர்வமான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை அக்னியில் இட்டு ஹோமம் செய்யும்போது அந்தப் புகை நம் சுவாசத்தில் கலந்து, நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால்தான் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு கொள்வதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment