ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிறப்பு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமமும், ஸ்ரீ வித்யா கணபதி, சரஸ்வதி மற்றும் சகல தேவதா காயத்ரீ ஹோமமும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் தமிழ்நாடு மற்றும் பல பகுதிகளிலிருந்தும் மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் என பல தரப்பு மக்களும் வந்திருந்து கலந்து கொண்டனர்.
பீடத்தில் உலகில் வேறெங்கும் காணமுடியாத வகையில் அமைந்திருக்கும் வெளிர் பச்சை நிறக் கல்லாலான ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு தேனபிஷேகமும், கலசாபிஷேகமும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் சிறப்பாக நடைபெற்றது.
அந்த சமயத்தில் ஸ்வாமிகள் ஹயக்ரீவரின் அவதாரம் பற்றியும், ஆவணி திருவோணம் பற்றியும், வாமன அவதாரத்தின் சிறப்பும், மகாபலிசக்ரவர்த்தி பற்றியும், வேதாந்த தேசிகரின் சிறப்புகளையும், தேர்வில் மாணவ, மாணவிளர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறவும், வாக்கு வன்மை பெறவும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.
பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், தேன் போன்றவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையிலும், சிறப்பு நித்திய அன்னதானத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் அருளையும், தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளையும் பெற்று மன மகிழ்ச்சியுடன் சென்றனர்.
No comments:
Post a Comment