வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐம்பெரும் விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா இன்று 9ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 11ம் தேதி முடிய நடைபெறுகிறது.
விழாவில் முதல்நாளான இன்று 9ம்தேதி காலை மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, மகா கணபதி,நட்சத்திர, நவக்கிரக , ஸ்ரீ தன்வந்திரி, ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 62 சுமங்கலிகள் ,62 கன்னி பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு , சாதுக்களுக்கு வஸ்திரம்,
5 கிலோ அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் வாலாஜா ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு. கூனம்பட்டி ஆதினம், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நங்க நல்லூர் காமாட்சி ஸ்வாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார் , இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா தாசில்தார் நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், வக்கீல் ராஜசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள், ஆன்மீக சான்றோர்கள்,தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் , வியாபார பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளை 10ம்தேதி 62 வடுக பூஜை,62 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள் வழங்குதல் உள்பட ஸ்ரீ சுதர்சன ஆ-ழ்வார்க்கு சிறப்பு ஹோமம் அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் 11ம்தேதி தன்வந்திரி தீர்த்தக்குளம் திறப்பு விழா, 62 தம்பதி பூஜை,62 நாதஸ்வர கலைஞர்களின் இசை விழா,முதலுதவி பொருள்கள் வழங்கும் விழா , மரக்கன்றுகள் நடும் விழா , ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு கலசாபிஷேகம் , பூஜைகள் , அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment