Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, April 30, 2013


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

வேண்டியது நிறைவேறியது…

வாலாஜாபேட்டை, ஏப்ரல் 30, 2013

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்த ஸ்ரீமதி டாக்டர் ஆர்.புஷ்பவல்லி, பேராசிரியர்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி காலேஜ் ஆப் வுமன், வந்தவாசியில் பணிபுரிகின்ற  அவர்கள் சென்றமுறை வந்தபோது பீடத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயரிடம் ஆத்மார்த்தமாக வேண்டுதல் செய்தார். அந்த வேண்டுதல் தற்போது அவர்களுக்கு நிறைவேறி விட்டதால் எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தார். அவர் இன்று தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து சஞ்சலம் போக்கும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான வடைமாலை சாற்றி சிறப்பு பிரார்த்தனை செய்து மகிழ்ந்தனர், மேலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்றார்.

Sunday, April 28, 2013
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தன்வந்திரி மூலவருக்கு 500 லிட்டர் தேன் அபிஷேகம்.

வாலாஜாபேட்டை, மே, 1, 2013.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் நலன் கருதியும், தொழிலாளர் குடும்பங்களின் நலன் கருதியும், நிர்வாகத்தினருக்கும், தொழிலாளருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவும், நன்மதிப்புக் கூடவும், அவர்களின் மனரீதியான நோய்களும், உடல் ரீதியான நோய்களும் நீங்கி ஆனந்தம் பெற 8ஆம் ஆண்டு தேன் அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் நலன் கருதியும், மருத்துக் குடும்பங்கள் நலன் கருதியும், மருத்துவத் துறையில் உள்ள அனைவரின் ஆரோக்யம் கருதி மஹா தன்வந்திரி ஹோமமும், 8 ஆம் ஆண்டு மருத்துவ மேளாவும் நடைபெற உள்ளது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

சுயம்வரகலா பார்வதி ஹோமம்


கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 28.4.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு சுயம்வரகலா பார்வதி ஹோமம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 120 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசதீர்த்தத்தை பெண்களுக்கு அபிஷகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 28.4.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்று  நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ சுதர்ஷன ஹோமம், சூலினி துர்கா ஹோமம் ஆகிய ஹோமங்களில் பக்தர்கள் பங்கேற்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

Saturday, April 27, 2013

நலம் தரும் ஹோமங்கள்! பாகம் - 3


நவநீத கிருஷ்ணன்


எந்த ஒரு செயலுக்குமே சிரத்தைதான் முக்கியம். சிரத்தை இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியைத் தருவதில்லை என்று கடந்த பதிவில் சொல்லி இருந்தேன்.

இறந்தவர்களுக்கு வருடா வருடம் நாம் செய்யும் பித்ரு கடன்களை இதனால்தான் ‘சிராத்தம்’ என்று சொல்கிறோம். சிரத்தையுடன் & அதாவது போதிய அக்கறையுடன் அவர்களுக்கு உண்டான காரியங்களை நிறைவேற்றினால்தான், மேலுலகத்தில் இருக்கின்ற அந்த உள்ளங்கள் மகிழ்ந்து நாம் நிம்மதியாக வாழ அருள் புரிவார்கள்.

எந்த ஒரு ஹோமத்தையும் கடனே என்று செய்யக் கூடாது. ஹோமம் என்பதே பரிகாரம் தொடர்பான ஒரு சடங்கு. எனவே, அவரவர் செய்யும் வழிபாட்டுத் தன்மைக்கு ஏற்ப ஹோமங்களுக்கு உண்டான பலன் கிடைக்கும். 

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆசிரமத்தில் நடக்கின்ற அனைத்து ஹோமங்களும் வேத பண்டிதர்களின் வழிகாட்டுதலுடனும், அவர்களின் சீரிய தலைமையிலும் நடந்து வருகின்றன. எந்த ஒரு பரிகாரத்துக்கும் அதற்கு உகந்த நாளில் இங்கே ஹோமம் நடக்கின்றது. வியாபார அபிவிருத்தி, தொழில் போட்டிகளில் இருந்து மீளுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி, குடும்பம் தொடர்பான அனைத்து நலன்கள் & என எல்லாவற்றுக்குமே ஹோமங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. 

இங்கு நடக்கின்ற எண்ணற்ற ஹோமங்களுள் ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் ஒன்று. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் இதில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு எல்லா வசதியும் இருந்து வந்தது. ஆனால், ஒரே ஒரு குறை மட்டும் அந்த சக்ரவர்த்தியை ரொம்பவும் வேதனைப்பட வைத்தது. அதுதான் & புத்திர பாக்கியம்.

தசரத மகாராஜாவுக்கு அறுபதாயிரத்து சொச்சம் மனைவிகள். ஆனாலும், எந்த ஒரு மனைவி மூலமும் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. உரிய பண்டிதர்களின் ஆலோசனைப்படி ஒரு சில பரிகாரங்கள் செய்து பார்த்தும் பலன் இல்லை. எனவே, தன் குலகுரு வசிஷ்டர் மற்றும் மந்திரிமார்களின் ஆலோசனையைக் கேட்டார். அதன்படி வசிஷ்டர் அருளியதன் பேரில் ‘புத்திர காமேஷ்டி யாக’த்தை பிரமாண்டமாக நடத்தினார் தசரதர். 

மிகவும் சிரத்தையுடன் தசரதன் அனுஷ்டித்த அந்த யாகத்தில் மகாவிஷ்ணுவே நேரில் தோன்றி மன்னனை ஆசிர்வதித்தார். பிறகு தங்கத்தால் ஆன ஒரு பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து, ‘இதில் இருக்கின்ற ஹோம பிரசாதமான தேனை (பாயசம் என்றும் சொல்வர்) நீ விரும்பும் மனைவியர்களுக்குக் கொடு. அவர்கள் தாய்மைப் பேறு அடைந்து, உனது உள்ளம் குளிரும்படி பிள்ளைகளைப் பெற்றெடுத்துத் தருவார்கள். உனது ராஜ்யத்துக்கே அவர்கள் பெருமை சேர்ப்பார்கள்’ என்று அருளி மறைந்தார். அதன்படி அருட் பிரசாதமான தேனை தன் மனைவியர்களான கௌசல்யா, சுமித்திரா மற்றும் கைகேயி ஆகியோருக்குப் பகிர்ந்து அளித்தார். 

நாட்கள் சென்றன. தசரதனின் இந்த மூன்று மனைவியர்களும் தாய்மைப்பேறு அடைந்தனர். உரிய காலத்தில் குழந்தைகளையும் பெற்றனர். இதில் கௌசல்யாவுக்கு ராமபிரானும், கைகேயிக்கு பரதனும், சுமித்திராவுக்கு இரட்டையரான லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோரும் அவதரித்தனர். தசரதன் பெற்ற மகிழ்வுக்கு அளவே இல்லை.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குழந்தைப் பேறு பெற உதவும் ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீண்ட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, அந்தப் பேற்றை அடைய விரும்பும் தம்பதியர், இங்கே வந்து ஹோமம் செய்து பிரார்த்தித்துச் சென்று பலன் அடைகிறார்கள். இதுபோல் பலருக்கும் பிரார்த்தனை பலித்துள்ளது. அப்படிக் குழந்தை பெற்ற தம்பதியர் தங்கள் குழந்தையை ஒரு சில மாதங்களுக்குப் பிறகு இங்கு அழைத்து வந்து, ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு நன்றி தெரிவித்து விட்டு, என்னிடம் அருட் பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். 
சுமார் ஒண்ணரை வருடங்களுக்கு முன் வேலூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் ஸ்ரீதன்வந்திரி பீடத்துக்கு வந்தனர். தங்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாத குறையை என்னிடம் சொல்லி அழுதனர்.

அவர்களிடம், ‘இங்கு நடக்கின்ற ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். பிரசாதத்தை வாங்கி உட்கொள்ளுங்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளால் உங்களுக்குக் கோடீஸ்வர குழந்தை வாய்க்கும்’ என்று சொன்னேன்.

அவர்களுக்குப் பிரமிப்பு. குழந்தை பிறக்கும் என்று சொன்னால், அதில் தவறில்லை. கோடீஸ்வரக் குழந்தை பிறக்கும் என்று சொன்னேன். இதுதான் அவர்களின் பிரமிப்புக்குக் காரணம். ‘எங்களுக்கு எப்படி சாமீ கோடீஸ்வரக் குழந்தை பிறக்கும்? நாங்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே?’ என்று கேட்டனர். ‘ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளால் எல்லாமே வாய்க்கும் அம்மா’ என்று சொல்லி, பிரசாதம் தந்து அனுப்பி விட்டேன்.

அண்மையில் அந்தத் தம்பதியர் இங்கே வந்தார்கள். அடையாளமே தெரியவில்லை. அந்தப் பெண்மணியின் கழுத்து, கைகளில் தங்க ஆபரணங்கள் மின்னின. கணவர் முகத்திலும் செழிப்பு. அவரது கையில் ஒரு குழந்தை; மனைவி கையில் ஒரு குழந்தை என இரட்டைக் குழந்தைகளுடன் வந்தனர்.

நேராக வந்து எனக்கு நமஸ்காரம் செய்தனர். பிறகு அந்தப் பெண்மணி சொன்னார் & ‘சாமீ... நீங்க சொன்ன மாதிரி குழந்தை பொறந்திடுச்சு. ஒண்ணு இல்ல சாமீ. ரெட்டை. குழந்தைங்க பொறந்த வேளை... என்னோட அப்பா பூர்வீக ஊர்ல இருக்கிற தன்னோட சொத்தை எல்லாம் பிரிச்சுத் திடீர்னு என் பேருக்கு அதிகமா எழுதி வெச்சுட்டார். இதுக ரெண்டும் இப்ப கோடீஸ்வரக் குழந்தைங்க’ என்று ஆனந்தக் கண்ணீருடன் சொன்னார்.

யோகப்படி எந்த வேளையில், என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நிச்சயம் நடந்தே தீரும். அது நிறைவேறுவதற்குச் சில பரிகாரமாக நாம் செய்வதே ஹோமம்!

(இன்னும் வரும்)

நலம் தரும் ஹோமங்கள்! பாகம் - 2
நாம் என்ன விதைக்கிறோமோ, அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
தினை விதைத்தால் தினையை அறுவடை செய்வோம். வினை விதைத்தால், வினையை அறுவடை செய்வோம்.

அதுபோல் ஹோமத்தில் & என்னென்ன சமித்துகளை/ திரவியங்களை (பொருட்களை) அக்னி பகவானுக்கு சமர்ப்பிக்கிறோமோ, அதற்கேற்றபடிதான் பலன்கள் அமையும்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கின்ற எந்த ஒரு ஹோமத்துக்கும் திரவிய விஷயத்தில் பஞ்சமே கிடையாது. சாதாரணமாக ஒரு ஹோமத்தில் சேர்க்க வேண்டிய சமித்தில்/ திரவியத்தில் & ‘இது கிடைக்கவில்லை என்றால், இன்னதை மாற்றாகச் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று சாஸ்திர நூல்களிலேயே மாற்று ஏற்பாடு உண்டு. ஆனால், அத்தகைய மாற்றுக்கு எப்போதும் நான் இடம் தருவதில்லை. 

இங்கு வந்து ஹோமம் செய்பவர்கள், இந்த ஹோமப் புகையில் திளைத்து, இதற்குண்டான பலன்கள் அவர்களைப் பரிபூரணமாகப் போய்ச் சேர வேண்டும் என்பதில் எனக்கு உறுதி உண்டு.

குறிப்பிட்ட பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஹோமங்களுக்குக் குறிப்பிட்ட பலன்கள் உண்டு என்பது ஆதாரபூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது நிரூபணமும் ஆகி இருக்கிறது.

தேங்காய்க் கீற்றுகளைக் கொண்டு ஹோமம் செய்தால் செல்வ வளம் பெருகும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவற்றைக் கொண்டு ஹோமம் செய்தால், எண்ணியது நிறைவேறும்.

  • நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை பூர்த்தி செய்து தரும்.
  • ஹோமத்தில் தேன் சேர்த்தால் தங்கம் சேரும். 
  • நெய்யில் தோய்ந்த அப்பம், ராஜ வசியம் தரும். 
  • மோதகம், வெற்றியைத் தேடித் தரும். 
  • தாமரை மலர்கள் கொண்டு ஹோமம் செய்தால், செல்வ வளர்ச்சி பெருகும்.  வெண்தாமரை கல்வி ஞானத்தையும், அருகம்புல் குபேர சம்பத்தையும் தரும்.


இப்படிப் பல்வேறு திரவியங்கள் கொண்டு நடத்தப்படும் ஹோமங்களின்போது கிளம்பும் புகையானது அனைத்து இடங்களிலும் வியாபிக்கும். இத்தகைய புகை காற்றில் கலந்து இயற்கை ரீதியாகவும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. இந்தத் தகவலை நவீன விஞ்ஞானமும் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எந்தெந்த ஹோமத்துக்கு என்னென்ன சமித்துக்கள்/ திரவியங்கள் சேர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை.

ஹோமங்களின்போது ஆச்சார்யர்கள் உச்சரிக்கும் மந்திரங்களின் ஒலியலைகள் அந்த இடத்தில் பரிபூரணமாக நிரம்பி எஜமானரின் உள்ளத்தில் நல்ல மாறுதல்களை உருவாக்குகின்றது என்பதும் நிஜமே!

எந்த ஒரு ஹோமம் ஆனாலும், அதை நடத்துகின்ற எஜமானரும், நடத்துவதற்கு வருகின்ற ஆச்சார்யர்களும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,  சிரத்தை முக்கியம். சிரத்தை இல்லாமல் எவர் ஹோமம் செய்தாலும், அதற்குரிய பலன் கிடைக்காமல் போய் விடும் என்பதற்கு உதாரணங்கள் உண்டு.

ஹோமத்தை நடத்திக் கொடுப்பதற்கு வருகின்ற ஆச்சார்யர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆச்சார அனுஷ்டானங்கள், உணவு, உடை & இப்படிப் பல விஷயத்திலும் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. 

அதுவும் ஒரு பொது காரியத்தை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் ஹோமங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் கட்டாயம் ஆகின்றன.
தமிழகத்தில் பல ஹோமங்களை நடத்திய பிரபலம் ஒருவர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவமே இதற்குப் பெரும் உதாரணம்...

அப்போது தமிழ்நாட்டில் மழையே இல்லையாம். எங்கும் பஞ்சம். தண்ணீருக்குத் தட்டுப்பாடு. சென்னையில் வசிக்கும் முக்கியமான சில ஆன்மிக அன்பர்கள் ஒன்றுதிரண்டு, காஞ்சிபுரம் மகா பெரியவரிடம் போய், விவரத்தைச் சொல்லி,‘இதற்கு என்ன பண்ணலாம்... ஸ்வாமிகள் சொல்லணும்’ என்று விண்ணப்பித்திருக்கிறார்கள். 

‘ஒரு ஹோமம் பண்ணுங்கோ. எல்லாம் சரி ஆயிடும்’ என்று சொல்லி, அந்த ஹோமத்தின் பெயரையும், அதைச் செய்வதற்கு உண்டான நியமங்களையும் விரிவாக எடுத்துச் சொன்னார் ஸ்வாமிகள். வந்தவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு மகா பெரியவரை நமஸ்கரித்து விட்டு உற்சாகமாகக் கிளம்பினர். 

காஞ்சிப் பெரியவர் சொன்ன நாளில் குறிப்பிட்ட அந்த ஹோமத்தை சென்னையில் செய்தார்கள். மகா பெரியவா சொன்ன நியமத்துக்கு அந்த ஹோமம் முடிந்தவுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டும். ஆனால், அந்த அளவுக்கு மழை இல்லை. ஏன் என்று எவருக்கும் காரணம் தெரியவில்லை. 

அடுத்த ஓரிரு நாட்களில் இந்த ஹோமம் நடத்திய அன்பர்களை மீண்டும் காஞ்சிக்கு வரச் சொல்லித் தகவல் அனுப்பினார் காஞ்சி ஸ்வாமிகள். போனார்கள். 

காஞ்சிப் பெரியவரிடம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, ‘ஹோமம் பண்ணினோம். ஆனா, எதிர்பார்த்த மழை இல்லே’ என்றனர் குறையாக.

காஞ்சிப் பெரியவர் முகம் மாறியது. ‘எப்படிடா மழை வரும்? உப்பு எதுவும் எடுத்துக்காம பத்தியம் இருந்து இந்த ஹோமத்தைப் பண்ணணும். ஆனா, வந்திருந்த ஒருத்தர் இதை மீறிட்டாரே’ என்றாராம்.

அந்தக் குழுவினருக்கு அதிர்ச்சி. காஞ்சி ஸ்வாமிகளிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு சென்னை திரும்பினார்கள். பிறகு, காஞ்சிப் பெரியவர் சொன்ன விஷயம் உண்மைதான் என்பதை விசாரித்து அறிந்து கொண்டார்கள். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து நல்ல மழை பெய்தது, அந்த மகானின் கருணையே!
எனவே, எந்த ஒரு ஹோமம் என்றாலும், அதற்குரிய சிரத்தையையும் மரியாதையையும் நாம் தர வேண்டும். அவை இல்லாமல் செய்யப்படும் ஹோமம், யாருக்கும் எந்தப் பலனையும் தராது.

கர்ம சிரத்தையுடன் செய்யப்படும் வழிபாடும், ஹோமமும் கூடுதல் பலன்களைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

(இன்னும் வரும்)

www.danvantripeedam@gmail.com

நலம் தரும் ஹோமங்கள்! (தொடர் கட்டுரை) பாகம் - 1


பாகம் - 1


ஹோமங்களைப் பற்றி

நல்வாழ்க்கை நாம் வாழ்வதற்கு தர்ம சிந்தனை, பொறுமை குணம், சகிப்புத் தன்மை போன்றவை எப்படி அவசியமோ, அதுபோல் இறை வழிபாடும் அவசியம் தேவை.

இறை பக்தி இல்லாத வாழ்க்கை, நிலவில்லாத வானம் போல்! மீன் இல்லாத கடல் போல்! அப்படிப்பட்ட வாழ்க்கையை & அதாவது இறை பக்தி இல்லாத ஒரு வாழ்க்கையை ஒருவர் வாழ நேர்ந்தால் அதனால் எந்தப் பலனும் அவருக்கு இல்லை.

கடந்த பிறவியில் செய்துள்ள நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜீவனும் அதற்குரிய பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும். அதன்படி அனுபவித்து வருகின்றன. இது நியதி. என்றாலும் & ஈடில்லாத இறை பக்தியினாலும், தயாள குணத்தினாலும், வாழுகின்ற முறையினாலும் தீவினைகளின் கெடுபலன்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். இது சர்வ நிச்சயம்.

எனவே, வாழுகின்ற இந்தக் காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய தீவினைகளை ஓரளவு குறைப்பதற்கு இறைவனை வழிபட்டே ஆக வேண்டும். அவனது அருளுக்குப் பாத்திரம் ஆக வேண்டும்.

எங்கும் நிறைந்துள்ள இறைவனை நாம் வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன.

சங்கீதம், நாம கோஷம், அர்ச்சனை, அபிஷேகம், ஜபம் & இப்படிப் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு வழிபாட்டு முறை & ஹோமம் செய்வது.

ஹோமங்கள் மூலமாக நமது பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஹோமங்களில் ஒரு தூதுவராகச் செயல்படும் அக்னி பகவான்தான் நமது கோரிக்கைகளை & எந்தெந்த தேவதைகளுக்கு வைக்கிறோமோ & அந்தந்த தேவதைகளிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கிறார்.

எனவேதான், வாலாஜாவில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் துவங்கிய காலத்தில் இருந்தே ஹோமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அக்னி பகவானின் வாசம் இல்லாத நாளே இங்கு இல்லை. தினம்தோறும் ஹோமங்கள். தங்களுக்கு நேர்ந்த பல விதமான பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, இந்த ஆரோக்ய பீடம் தேடி வருகிறார்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குகிறார்கள். என்ன ஹோமம் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ, அந்த ஹோமம் செய்து செல்கிறார்கள்.

யக்ஞ பூமிஎன்று சொல்லும் அளவுக்கு இதுவரை இங்கே பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீட யாக சாலையில் ஆண்டு முழுதும் ஐஸ்வர்யத்துடன் ஆயுள் பலம் பெற அபூர்வமான பல யாகங்கள் நடந்து வருகின்றன. இந்த யாகங்களுக்கு ஏற்ற வகையில் விசேஷமான சந்நிதிகளும் இங்கே அமைந்திருப்பது சிறப்பு.

வாழ்வில் வளமும் நலமும் பெறுவதற்கு இந்த ஹோம வழிபாடு உதவுகிறது.
உலக மக்களின் உடல் நலம், மன நலம் கருதியும், இயற்கைச் சீற்றம், பேரிடர்கள், கடல் கொந்தளிப்பு போன்ற பேராபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், உலக மக்களின் தேவைகளான திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நிரந்தர உத்தியோகம், கல்வி, குடும்ப க்ஷேமம், கடன் நிவாரணம், நோய் நிவாரணம், மன அமைதி, மன சாந்தி, ஆடை அணிகலன்கள் போன்றவற்றைப் பெறவும், துர் மரணம், விபத்துக்கள், வறுமை போன்றவற்றைத் தவிர்க்கவும், கொடிய வியாதிகளால் துன்பம் ஏற்படும்போதும், கிரகங்களின் பெயர்ச்சியினாலும் சுழற்சியினாலும் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னைகள் தீரவும், தம்பதிகளின் ஒற்றுமை, தாம்பத்ய அந்யோன்யம் வேண்டியும், சகல பாபங்களிலிருந்து விடுதலை பெறவும், சகல காரிய ஸித்தி அடையவும், லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் இருக்கவும், இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் கருதியும், நல் பழக்க வழக்கங்கள் வளரவும், அவர்களிடம் பாசம், நேசம், பக்தி போன்றவை சிறக்கவும் இத்தகைய ஹோமங்கள் மாபெரும் தூண்டுகோல் சக்தியாக அமையும்.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடக்கும் ஹோமங்களுக்கு பெரும் சிறப்பு உண்டு. காரணம் & இங்கே இருக்கின்ற யாகசாலையில்அணையா அக்னிஎன்றென்றும் வாசம் செய்து கொண்டிருக்கிறது. பீடம் துவங்கிய நாளில் ஏற்றப்பட்ட யாகசாலை அக்னி, இன்றளவும் விடாமல் தன் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது.

எத்தனை விதமான ஹோமங்கள் இன்று புழக்கத்தில் இருந்து வருகின்றன என்று பட்டியல் போட முடியாது. அந்த அளவுக்கு ஹோமங்களின் பட்டியல் வெகு நீளம்.

தடைகள் நீங்குவதற்கு கணபதி ஹோமம், ஆயுள் விருத்திக்கு ம்ருத்யஞ்ஜ ஹோமம், செல்வ விருத்திக்கு லட்சுமி ஹோமம், கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்யா ஹோமம், தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு கனகதாரா ஹோமம், நிலம் தொடர்பான பிரச்னைகள் அகல்வதற்கு வாஸ்து ஹோமம் என்று ஏராளம் இருக்கின்றன.

எந்த ஒரு ஹோமம் துவங்கப்படுவதற்கு முன்பாக, எல்லாவற்றுக்கும் மூல முதல்வனாக இருக்கிற கணபதி பெருமானை வணங்க வேண்டும். அவரை வணங்கிகணபதி ஹோமம்நடத்தி, அந்த விக்னேஸ்வரனின் அருளைப் பெற வேண்டியது அவசியம்.

விநாயகருக்கு மட்டும் தனியாக ஹோமம் செய்ய விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சதுர்த்தி தினங்களில் அதிகாலையில் ஹோமம் செய்யலாம்.

பண்டைய காலங்களில் உலக நன்மைக்காகவும், இயற்கையை வணங்கி வழிபடுவதற்கும் அரசர்களாலும், மிராசுதார்களாலும் ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இன்றைய தினத்தில் தனிப்பட்டவர்களின் நலனுக்காக ஹோமங்கள் செய்வது பெருகி இருக்கிறது.

(இன்னும் வரும்)

யோக பயிற்சி


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
விடுமுறைக்கால சிறப்பு யோகா
பயிற்சிபள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விடுமுறை நாட்கள் துவங்க உள்ள இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் இந்த விடுமுறை நாட்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளன்போடு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் யோகா மையத்தில் வருகிற மே மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர்களுக்கும், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாணவிகளுக்கும் இலவச யோகா பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவு, மற்றும் தங்கும் இடம், யோகாவிற்கு தேவையான பொருட்கள் ஆகிய அனைத்தும் இலவசம். இந்த யோகா பயிற்சியானது மிகவும் சிறப்பு வாய்ந்த யோகாகலை நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட இருக்கிறது.

ஆகவே மாணவ, மாணவியர் அனைவரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது உடல் ஆரோக்யம் காக்கவும், மன அமைதி பெறவும், நல்ல சிந்தனைகள் வளர்க்கவும், தீய பழக்க வழக்கங்கள் மறையவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் இந்த யோகா பயிற்சியை பயன்படுத்தி வாழ்வில் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்கம் கொடுத்து நோயின்றி வாழ வழிவகுக்க வேண்டும் என்று ஸ்ரீ தன்வந்திரி பீட ஸ்தாபகர், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்கள்

விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் முழு விபரங்களுடன் தலைமை ஆசிரியர் அல்லது பெற்றோர் சம்மதத்துடன் ஏப்ரல் 30, 2013 க்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி யோகா பயிற்சி மையம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீட ம் வளாகம்
கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை,
வேலூர் மாவட்டம் 632513.
தொலைபேசி எண் : 04172 230033