வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 41 அடி உயர சக்கரத்தாழ்வார் ஸ்தூபிக்கான பூமி பூஜை விழா
வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் நித்ய ஹோமங்கள், பல்வேறு சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று தன்வந்திரி ஆரோக்ய பீடம் யக்ஞபூமியாக திகழ்ந்து வருகிறது.
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆரோக்யம் அருளும் கடவுளான மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுடன், 468 சிவலிங்க ரூப சித்தர்கள் உள்பட 89 பரிவார தெய்வங்களும் அமைய பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும் தாய் மூகாம்பிகை, அருள்மிகு வீரபத்திரர் சன்னதிகளும் மிக விரைவில் அமைய உள்ளன.
இந்த நிலையில் தற்போது தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைய பெற்றுள்ள காலச்சக்கரத்தின் அருகில் 41 அடி உயரத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஸ்தூபி அமைக்கப்பட உள்ளது. ஒரு புறம் நரசிம்மரும், மற்றொரு புறம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் அமைக்கப்பட உள்ள இந்த ஸ்தூபிக்கான பூமி பூஜை விழா இன்று 23ம்தேதி திங்கள் கிழமை காலை 10.17 மணிக்கு நடைபெற்றது.
ஸ்தூபி பூமிபூஜையை முன்னிட்டு ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஹோமம் , ஸ்ரீ சூக்த ஹோமம் ஆகியவற்றுடன் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது.
மேலும் சியாமளா நவராத்திரியில் 2 வது நாளாக இன்றும் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம் , கனகதாரா பூஜைகள் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்தூபி பூமி பூஜை மற்றும் ராஜமாதங்கி ஹோமம், அபிஷேகம் ஆகியவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து , பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
-------------------
No comments:
Post a Comment