ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
மஹா சண்டி யாகம்
நாள் : 30.7.2013, செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
“லக்ஷ்மி ப்ரதான ஸமயே நவ வித்ருமாபாம்
வித்ய ப்ரதான ஸமயே சரதிந்து ஸூப்ராம் |
வித்வேஷி வர்க்க விஜயேஹி தமால நீலாம்
தேவிம் த்ரிலோக ஜனனீம் சரணம் ப்ரபத்யே ||
‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஔவை மூதாட்டி. அவ்வாறு அரிதாம் மானிடப் பிறவி கிடைத்தாலும் அதனை நல்வழி நடத்திச்செல்ல நமக்கு இன்றியமையாததாக விளங்குபவை கல்வி, செல்வம், வீரம் என்பனவாகும். இம்மூன்றின் சொரூபமாக விளங்குவது அன்னை பராசக்தியின் எழில் தோற்றமாகும். அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந் திருக்கும் இறைவன் ப்ரம்ம ஸ்வரூபத்தில் இருந்து உலகைப் படைக்க விரும்பிய நேரத்தில் எடுத்த வடிவே அன்னை பராசக்தியின் வடிவாகும். அத்தகைய அன்னை பராசக்தியே ஜகத்தினை உய்விக்கும் பொருட்டு பல வடிவங்களை எடுத்தாண்டாள். இவ்வுலகைக் காத்திடும் அவாவுடன் அன்னை எடுத்தாண்ட பல வடிவங்களில் முக்கியமானவை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்னும் வடிவங்களாகும். இம்மூவடிவங்களும் முப்பெரும் தேவியர் என்றே பண்டைக்காலம் தொட்டு அழைக்கப்படுகின்றனர். சத்வம், ரஜஸ், தமோ என்னும் முக்குணங்களாகவும், ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலின் உருவாகவும் திகழ்பவர்கள் இவர்கள்.
இத்தகைய இம்மூன்று சக்திகளின் சேர்க்கையாகத் திகழ்பவள் அன்னை சாமுண்டீஸ்வரி என்னும் சண்டிகா தேவியாவாள். “கலௌ சண்டௌ வினாயகௌ” என்னும் ஸ்ம்ருதி வாக்கியத்தின்படி இக்கலியுகத்தில் வணங்கப்பட வேண்டியவள் அன்னை சண்டிகா பரமேஸ்வரியாவாள். அனைத்து உயிர்களிடத்தும் தயையுடன் அருள்பவள் இச்சண்டிகா பரமேஸ்வரியே. இவளை ஆராதனை செய்யும் வழிமுறை பரமசிவனால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சண்டிகா பரமேஸ்வரியின் வழிபாடுகள் குறித்து பல ஸ்தோத்திரங்களும், பல நூல்களும் வழிபாட்டு முறைகளும் நிறைய உள்ளன. அத்தகைய பல ஸ்தோத்திரங்களில் தலயாய இடத்தைப் பிடிப்பது “சண்டி ஸப்தஸதி” என்னும் நூலாகும். யஜுர் வேதத்தில் நடுநாயகமாக விளங்கும் பஞ்சாட்சர மந்திரம் போலும், மகாபாரத புராணத்தில் நடுநாயகமாக விளங்கும் பகவத் கீதை போன்றும், மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்கு வது இந்த “சண்டி ஸப்தஸதி” யாகும்.
ஸப்தஸதிக்கு ஈடான ஸ்தோத்திரம் வேறெதுவும் இல்லை என்று பரமசிவனால் போற்றப் பட்ட பெருமையை உடையது இந்த மார்க்கண்டேய புராணத்தில் சண்டிகாதேவியின் பெருமையை உணர்த்தும் விதத்தில் 700 ஸ்லோக வடிவில் உள்ளது இந்த ஸப்தஸதியாகும். அதாவது ஸப்த-7 ஸதி-100 ஆக 700 ஸ்லோக வடிவ மந்திரங்களை உடையது என்று பொருள் படுகிறது. தேவியினுடைய வீரதீர பராக்ரமங்களையும், அதன் வாயிலாக அத்தேவியின் மகாத்மியங்களையும் விளக்குவதால் இந்நூல் “தேவி மாஹாத்மியம்” என்று காரணப்பெயர் கொண்டு விளங்குகிறது. ஸ்லோக வடிவில் இருப்பினும் 700 மந்திரங்களை உள்ளடக்கி இக்கலிகாலத்தில் நம்மை உய்வித்திடும் ஓர் ஒப்பற்ற நூலாக விளங்குகிறது இந்த தேவி மாஹாத்மியம்.
எவன் ஒருவன் அன்னை சண்டிகா பரமேஸ்வரியை வழிபடுகிறானோ அவனுள்ளிருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை அழியும். சண்டியை உபாசிப்பவனின் அகம் குளிர்ந்திருக்கும். எக்காரியங்களிலும் வெற்றியே பெறுவான். தன்னை அண்டியவர்களையும் வெற்றியின் பாதையிலே பீடு நடை போட்டு அழைத்துச் செல்வாள். இவ்வாறான அவளது ஸப்தஸதி என்னும் மாகாத்மியமானது பதிமூன்று அத்தியாயங்களாக விரிவுடன் அமைந்துள்ளது.
உலக அன்னையாம் சண்டிகா பரமேஸ்வரியை வழிபடும் விதங்களில் ஒன்றுதான் என்னும் இது உயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவளைக் குறித்து அவளை மகிழ்வுறுத்தும் பொருட்டு, அவளது ஆசிகளைப் பெறும் காரணமாக அவளுக்கு உகந்ததான வஸ்துக்களை, பொருள்களை அவள் பொருட்டு யாகத்தில் ஹவிர்பாகமாக அளிப்பதாகும் அத்தகைய யாகங்கள் பல இருப்பினும், உயர்ந்ததான “ஸப்த ஸதி”யைக் கொண்டு ஹோமம் செய்வது மிகவும் உயர்ந்தது. இதனை “சண்டி ஹோமம்” என்று கூறுவது நடைமுறையில் உள்ள பழக்கமாகும். சண்டி மஹா யாகத்தினைச் செய்யும் வழிமுறைகள் விரிவாக நம் மஹரிஷிகளால் விளக்கப்பட்டுள்ளன. கவசம், அர்கலம், கீலகம் போன்ற உயர்ந்த மந்த்ரங்களை ஜபித்து ஹோமம் செய்யவேண்டும்.
இச்சண்டி யாகத்தில் ப்ரதான ஹோம மந்திரமாக விளங்குவது “தேவி மாஹாத்மிய” க்ரந்தமாகும். பதிமூன்று அத்தியாயங்களுக்கும், பதிமூன்று தேவி வடிவங்கள், பதிமூன்று விதமான ஹவிர் பாகங்கள், பதிமூன்று விதமான பலாபலன்கள் என்று விளங்குவது இந்த ஹோமத்தின் சிறப்பாகும். இவ்வாறான சண்டி ஹோமம், மங்கள சண்டி ஹோமம், நவ சண்டி ஹோமம், சத சண்டி ஹோமம், ஸஹஸ்ர சண்டி ஹோமம், ஆயுத சண்டி ஹோமம் என்று பலவாறாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
“சரத்காலே மஹா பூஜா க்ரியதே யாச வார்ஷகி” என்பதற்கேற்ப, அதாவது “சரத்க” ருதுக்களில் சிறந்ததான சரத்ருதுவில் நவராத்திரி புண்ய காலத்தில் பராசக்தியை ஆராதிப்பவன் மேன்மை பல பெறுவான் என்பது பொருளாகும்.
கலசத்தில் அருள்புரிந்த தேவியை அக்னி ரூபத்தில் ஆவாஹனம் செய்து ப்ரதான சண்டி ஹோமம் நடைபெறவுள்ளது. இந்த ஹோமத்தில் பதிமூன்று அத்தியாய தேவிகளுக்கும் அவர்களுக்குப் பிரியமான நிறமுடைய வஸ்திரங்களில், அவர்களுக்குப் பிடித்த ஹவிர்பாகங்கள் வைத்து மங்கள வாத்தியம் முழங்க அத்தியாய பூர்ணாஹூதி நடக்க உள்ளது. இறுதியில் மஹா பூர்ணாஹூதியில் அக்னி ரூப சண்டிகா பரமேஸ்வரிக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்து வழிபட்டு, பட்டுப்புடைவை ஹோமத்தில் இடப்படவுள்ளது. தொடர்ந்து மங்கள இசை முழக்கத்துடன் மகா பூர்ணாஹூதி நடைபெறுவதைக் காணக் கண்கோடி வேண்டும். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு மந்த்ர புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, சதுர்வேத பாராயணம், கும்ப யதாஸ்தானங்கள் நடைபெற உள்ளது. தீர்த்த ப்ரோக்ஷணமும், ப்ரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ப்ராம்மண ஸந்தர்ப்பனையும், ஸம்பாவனையும் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்படவுள்ளது.
இத்தகைய அரிய ஹோமத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் வருகிற தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 21.7.2013 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த தொடர் யாகமானது நடைபெற உள்ளது.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment