ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு
உலக சமாதான ஆலய நிறுவனர் குருமகான் பரஞ்ஜோதி அவர்கள் வருகை புரிந்தார்…
ஜூலை 6, 2013 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு உலக சமாதான ஆலய நிறுவனர் குருமகான் பரஞ்ஜோதி அவர்கள் வருகை புரிந்தார். குரு மகான் அவர்களுக்கு தன்வந்திரி குடும்பத்தினர் சார்பில் மேளதாளங்களுடன் பூர்ணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பீடத்தில் உள்ள தன்வந்திரி யோகா மையத்தில் ஆன்மிக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது… மனிதன் ஒவ்வொருவரும் தியானத்தையும், யோக பயிற்சியையும் கடைபிடித்து மனதை ஒரு நிலைப்படுத்தி நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும். ப்ரார்த்தனையுடன், சங்கல்பமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போதுதான் இறைநிலை அடைய முடியும் என்றார். அப்படிப்பட்ட நிலையை ஒவ்வொருவரும் அடையும் போதுதான் உலகம் ஷேமமாக இருக்கும் என்றார்.
மேலும் தன்வந்திரி பீடத்தை பற்றி கூறுகையில் உடல்நலம் மனநலம் காக்கின்ற பீடமாகவும், பஞ்சபூதங்களின் சக்தியை ஈர்த்து தருகின்ற மூலிகை வனத்தை கொண்ட பீடமாகவும், வாழ்வியல் ஆராய்ச்சி மையம் என்பதற்கு ஏற்ற அனைத்து விதமான அம்சமுள்ள பீடமாகவும் திகழ்ந்து வருகிறது என்றார். உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி மக்களுக்கு உதவி வருகின்ற கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பணி மேன்மேலும் உயரவேண்டும், ஸ்வாமிகள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் அனைவரும் ஷேமமாக வாழ வேண்டும் என்று அருளுரை வழங்கினார்.
இறுதியில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் ஸ்ரீ தன்வந்திரி பகவானை தரிசித்து இதர 65 பரிவார தெய்வங்களையும், 468 சித்தர்களையும் தரிசனம் செய்து லோக ஷேமத்திற்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் செய்தார் என்று பீடத்தினர் தெரிவித்தனர்.
குருமகான் பரஞ்ஜோதி உரையாற்றிய காட்சி
No comments:
Post a Comment