தன்வந்திரி பீடத்தில்
சகல சௌபாக்யங்கள் தரும்
ஆடி பூரத்தில் அன்னதோஷம் நீங்க
தங்க அன்னபூரணிக்கு அன்னபடையல்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நேற்று
13.08.2018 திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால்
ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி
பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளால் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்து
தினசரி அனுகிரகம் செய்துவரும் அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க
அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம்
கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு
வழிபாடு செய்து வருகை புரிந்த
பக்தர்களுக்கு அன்னதோஷம்
அகலவும் சகல சௌபாக்யங்கள் கிடைக்கவும் அன்னபூரணியின் அன்னம் பிரசாதமாக வழங்கபட்டது.
அன்னபூரணி நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள். இவளது கையில் பால்
அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை
நாடிவருவோருக்கு வயிற்று பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள்.
அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி
என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!!
என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்!
மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும்
(உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால்
வேண்டுகிறார்.
வள்ளலார் சொல்வதைக் கேளுங்க
அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம்
உண்டு. ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர்
வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும்
வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி
வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும்
தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில்,
உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும்.அன்னதானம்
இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது.இறையருள் எப்போதும் துணை
நிற்கும்.மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும்
உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது.
சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே
இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று
அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார்.
எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக்
காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி
பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த
அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில்
ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன க்ஷத்திரம் என்ற
பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து
நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும்,
நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த
அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது.
அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம்
என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே
பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.வழிபாட்டு முறைகள் எத்தனையோ
இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது
அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார்
சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்
போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும்
கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி
மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே. சோறு கண்ட இடம் சொர்க்கம்.
இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது
ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக்
கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.
தர்மம் தலைகாக்கும்
பாடுபட்டு தேடிய செல்வத்தை சேமிக்க ஆயிரமாயிரம் வழி முறைகளை இன்று
நாம் பின்பற்றுகிறோம். ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் செல்வத்தை
சேமிக்க காட்டும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
திருக்குறள் ஈகை அதிகாரத்தில், அற்றார் அழிபசி
தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி என்கிறார். ஏழைகள் பசியால்
வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன்
இறையருளைப்பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன், சரியான சந்தர்ப்பத்தில் நம் உயிரையும் காக்கும், என்பது அவரது கருத்து. இதையே
செய்த தர்மம் தலைகாக்கும் என்று குறிப்பிட்டனர். இறையருள் என்னும்
வட்டியைப் பெற, இதை விட பாதுகாப்பான முதலீடு
வேறொன்றும் கிடையாது. இத்தகைய
சிறப்புகளுடைய வழிபாட்டினை நேற்று ஆடி பூரத்தில் பக்தர்கள் நலன் வேண்டி மாதா அன்னபூரணிக்கு
மஹா அபிஷேகம் நடைபெற்று அன்னப்படயலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிறைவாக அன்ன
பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கப்படட்து. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment