ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது…
உலக நலன்கருதி 16.10.2013 புதன் கிழமை அன்று பிரதோஷ நாளை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள 468 சித்தர்களுக்கும், மரகதீஸ்வரருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றதது. இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வறுமை, பயம், பாவம், மரணவேதனை போன்ற தொல்லைகள் நீங்கி, நன்மைகள் பல கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பது புராணக் கருத்தாகும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
நீண்ட காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர்.
அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.
பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலைக் கடைய முடியாது. அவர்களைச் சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.
தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, ஒருபுறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் கடைய ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ஆலகாள விஷம் கொடிய வெப்பமும், கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.
தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, இடமும் வலமும் ஆக ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலயங்கிரி சென்றனர்.
நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று கூறினார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை கொண்டு வந்தார்.
எல்லோரும் அதிசயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் 'விஷாபகரணமூர்த்தி' என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். 'கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் 'நீலகண்டர்' ஆனார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
கயிலையில் ஈசன் விஷம் உண்டபிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரைப் போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.
ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவளை ஒரு பக்கம் கொண்டு சூலத்தைச் சுழற்றி டமருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார்.
இந்நாட்டியத்தைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் 'ஹரஹர' என்று துதித்தனர்.
அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்தி வருகிறார். இந்தக்கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரம்மன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதகணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.
No comments:
Post a Comment