Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, July 3, 2013

ஹோமங்கள் தொடர் கட்டுரை பாகம் - 6

டாக்டர் ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்

நலம் தரும் ஹோமங்கள்!


ஹோமம் நடக்கின்ற இடங்களில் ஆத்மார்த்தமாகக் கலந்து கொண்டாலே எண்ணற்ற பலன்கள் நம்மை வந்து அடையும். வேத மந்திரங்கள் அட்சர சுத்தமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த இடத்தில் நிலவுகிற அதிர்வலைகள் பக்தர்களது மனதை நிறைத்து, பாஸிட்டிவ் எண்ணங்களை அவர்களுக்குள் உருவாக்கும். இது பல நல்ல செயல்களுக்குக் காரணமாக அமையும். 

தவிர, வேத பண்டிதர்களால் மந்திரங்கள் சொல்லி ஹோம அக்னியில் இடப்படுகிற திரவியங்கள் மற்றும் சமித்துக்களின் புகை, அந்தப் பகுதி முழுக்கப் பரவி, பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்றைக்கு ஒரு தலைவர் உடல்நலம் சரி இல்லாமல் போனாலும், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றாலும், தேசத்தில் எதிரிகள் ஒழிய வேண்டும் என்றாலும் ஹோமங்கள் செய்கிற நடைமுறை பிரபலமாகி வருகிறது. இதனால் பலனும் கிடைக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் விஷ வாயுக் கசிவை எவரும் மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட சீரழிவின்போதும் ஒரே ஒரு வீட்டில் இருந்தவர்கள் மட்டும் எந்த விதமான சிறு பாதிப்பும் இல்லாமல் தப்பினார்களாம். காரணம் என்ன? அந்த வீட்டில் தினமும் ஹோமம் நடக்குமாம். விஷ வாயுவின் பிடியில் இருந்தே விடுபடுவதற்கு ஹோமம் உதவும் என்றால், அதன் மகத்துவத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதனால்தான் தனிப்பட்ட முறையில் ஹோமங்கள் அமையாமல், உலக நலத்தை முன்னிட்டும், மழை பொழிய வேண்டும் என்றும், வியாதிகள் குறைய வேண்டும் என்றும், நாட்டில் நிலவுகிற அசாதாரணமான சூழல் விலக வேண்டும் என்றும் பல பொது இடங்களில் ஹோமங்கள் பெரிய அளவில் இன்றைக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் டெங்கு ஜுரம் என்கிற கோர அசுரன் விஸ்வரூபமாகக் கிளம்பி பலரையும் பீதி அடைய வைத்தான். ஆங்காங்கே அழுகுரல்கள்... அவல ஓலங்கள்... தமிழகமே களேபரமானது. அந்த வேளையில் பல பக்தர்களும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து, ‘டெங்கு அசுரனின் பார்வை நமது தேசத்திலேயே படக் கூடாது. அதற்காக ஒரு விசேஷ ஹோமம் செய்யுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். தேசத்தின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி, வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி ஹோமம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.  

பல விஷக் கிருமிகளை நசுக்குகிற வல்லமை நமது ஹோம மந்திரங்களுக்கும், மூலிகை திரவியங்களுக்கும் உண்டு. இதை மனதில் கொண்டுதான் சித்த மருத்துவங்களும், மூலிகை வைத்திய முறைகளும் பண்டைய காலத்தில் துவங்கின. அந்த முறைகளும் பாரம்பரியமும் நம்மை விட்டுப் போய் விடக் கூடாது என்று அனைத்தையும் காத்து வருகின்ற அரும் பணியைத்தான் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் இன்று சிரமேற்கொண்டு செய்து வருகிறது. 
இது குறித்த ஆராய்ச்சிகளிலும், முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி வருகிறோம். கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

தீர்வு இல்லாத பிரச்னைகள் இருக்க முடியாது. அதுபோல் தீர்க்க முடியாத வியாதிகளும் கிடையாது. எந்த ஒரு நோய்க்கும் & நம் சித்தர்கள் அருளிய நூல்களில் ஒரு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. முறையான வல்லுநர்களைக் கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம். நோயில்லா ஒரு உலகத்தை உருவாக்க ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் அயராது பாடுபட்டு வருகிறது.
மருத்துவக் கடவுளான ஸ்ரீதன்வந்திரி பகவான் பிரதானமாக வீற்றிருக்கக் கூடிய இந்த பீடத்தில் அவரது அருளோடும், ஆசியோடும் பல முயற்சிகளை செய்து வருகிறேன். இதற்குப் பல மகான்களின் அருளாசியும், தெய்வங்களின் அனுக்ரஹமும் எனக்கு இருந்து வருகிறது.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து திரும்பும் பக்தர்கள் மன நிம்மதியோடு செல்கிறார்கள். இந்த யக்ஞ பூமியில் கால் பதித்த பின் தங்களுக்குள் நிகழும் பல நல்ல மாறுதல்களை பக்தர்கள் என்னிடம் மெய் சிலிர்ப்போடு தெரிவிக்கிறார்கள். இந்த அனுபவங்களை அவர்கள் மற்றவர்களிடம் சொல்லும்போது இந்த பீடத்தின் மகிமை பலருக்கும் போய்ச் சேருகிறது. 

‘ஒரு ஹோமத்தில் கலந்து கொள்வதால் எனக்கு என்ன பலன் சாமீ?’ என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இன்றைய யுகத்தில் வாழுகின்ற மனிதர்கள் பலனை எதிர்பார்த்துதான் எதையும் செய்கிறார்கள். அதை தவறு என்று நான் சொல்லவில்லை. அதே சமயம் & சித்தர்களும் மகரிஷிகளும் நமக்கு அருளிய ஏராளமான ஹோமங்கள், நம்மை வாழ்விக்க வந்தவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்காலத்தில் யாகங்களே ஒரு தேசத்தையும் மன்னனையும் வாழ்வித்தன. மனிதர்களுக்கு இருக்கக் கூடிய எந்த ஒரு பிரச்னை அகல்வதற்கும் ஹோமம் சிறந்த பரிகாரமாக அமைந்துள்ளது.
ஆதி சங்கரர் வகுத்துள்ள ஷண்மதங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஹோமங்கள் இங்கே நடந்து வருகின்றன. ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஸ்ரீசண்டி ஹோமம், ஸ்ரீநிகும்பலா ஹோமம், ஸ்ரீபிரத்யங்கிரா ஹோமம் & இப்படி பல ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்து வருகின்றன.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment