Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 27, 2013

நலம் தரும் ஹோமங்கள்! பாகம் - 2




நாம் என்ன விதைக்கிறோமோ, அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
தினை விதைத்தால் தினையை அறுவடை செய்வோம். வினை விதைத்தால், வினையை அறுவடை செய்வோம்.

அதுபோல் ஹோமத்தில் & என்னென்ன சமித்துகளை/ திரவியங்களை (பொருட்களை) அக்னி பகவானுக்கு சமர்ப்பிக்கிறோமோ, அதற்கேற்றபடிதான் பலன்கள் அமையும்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கின்ற எந்த ஒரு ஹோமத்துக்கும் திரவிய விஷயத்தில் பஞ்சமே கிடையாது. சாதாரணமாக ஒரு ஹோமத்தில் சேர்க்க வேண்டிய சமித்தில்/ திரவியத்தில் & ‘இது கிடைக்கவில்லை என்றால், இன்னதை மாற்றாகச் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று சாஸ்திர நூல்களிலேயே மாற்று ஏற்பாடு உண்டு. ஆனால், அத்தகைய மாற்றுக்கு எப்போதும் நான் இடம் தருவதில்லை. 

இங்கு வந்து ஹோமம் செய்பவர்கள், இந்த ஹோமப் புகையில் திளைத்து, இதற்குண்டான பலன்கள் அவர்களைப் பரிபூரணமாகப் போய்ச் சேர வேண்டும் என்பதில் எனக்கு உறுதி உண்டு.

குறிப்பிட்ட பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஹோமங்களுக்குக் குறிப்பிட்ட பலன்கள் உண்டு என்பது ஆதாரபூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது நிரூபணமும் ஆகி இருக்கிறது.

தேங்காய்க் கீற்றுகளைக் கொண்டு ஹோமம் செய்தால் செல்வ வளம் பெருகும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவற்றைக் கொண்டு ஹோமம் செய்தால், எண்ணியது நிறைவேறும்.

  • நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை பூர்த்தி செய்து தரும்.
  • ஹோமத்தில் தேன் சேர்த்தால் தங்கம் சேரும். 
  • நெய்யில் தோய்ந்த அப்பம், ராஜ வசியம் தரும். 
  • மோதகம், வெற்றியைத் தேடித் தரும். 
  • தாமரை மலர்கள் கொண்டு ஹோமம் செய்தால், செல்வ வளர்ச்சி பெருகும்.  வெண்தாமரை கல்வி ஞானத்தையும், அருகம்புல் குபேர சம்பத்தையும் தரும்.


இப்படிப் பல்வேறு திரவியங்கள் கொண்டு நடத்தப்படும் ஹோமங்களின்போது கிளம்பும் புகையானது அனைத்து இடங்களிலும் வியாபிக்கும். இத்தகைய புகை காற்றில் கலந்து இயற்கை ரீதியாகவும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. இந்தத் தகவலை நவீன விஞ்ஞானமும் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எந்தெந்த ஹோமத்துக்கு என்னென்ன சமித்துக்கள்/ திரவியங்கள் சேர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை.

ஹோமங்களின்போது ஆச்சார்யர்கள் உச்சரிக்கும் மந்திரங்களின் ஒலியலைகள் அந்த இடத்தில் பரிபூரணமாக நிரம்பி எஜமானரின் உள்ளத்தில் நல்ல மாறுதல்களை உருவாக்குகின்றது என்பதும் நிஜமே!

எந்த ஒரு ஹோமம் ஆனாலும், அதை நடத்துகின்ற எஜமானரும், நடத்துவதற்கு வருகின்ற ஆச்சார்யர்களும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,  சிரத்தை முக்கியம். சிரத்தை இல்லாமல் எவர் ஹோமம் செய்தாலும், அதற்குரிய பலன் கிடைக்காமல் போய் விடும் என்பதற்கு உதாரணங்கள் உண்டு.

ஹோமத்தை நடத்திக் கொடுப்பதற்கு வருகின்ற ஆச்சார்யர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆச்சார அனுஷ்டானங்கள், உணவு, உடை & இப்படிப் பல விஷயத்திலும் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. 

அதுவும் ஒரு பொது காரியத்தை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் ஹோமங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் கட்டாயம் ஆகின்றன.
தமிழகத்தில் பல ஹோமங்களை நடத்திய பிரபலம் ஒருவர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவமே இதற்குப் பெரும் உதாரணம்...

அப்போது தமிழ்நாட்டில் மழையே இல்லையாம். எங்கும் பஞ்சம். தண்ணீருக்குத் தட்டுப்பாடு. சென்னையில் வசிக்கும் முக்கியமான சில ஆன்மிக அன்பர்கள் ஒன்றுதிரண்டு, காஞ்சிபுரம் மகா பெரியவரிடம் போய், விவரத்தைச் சொல்லி,‘இதற்கு என்ன பண்ணலாம்... ஸ்வாமிகள் சொல்லணும்’ என்று விண்ணப்பித்திருக்கிறார்கள். 

‘ஒரு ஹோமம் பண்ணுங்கோ. எல்லாம் சரி ஆயிடும்’ என்று சொல்லி, அந்த ஹோமத்தின் பெயரையும், அதைச் செய்வதற்கு உண்டான நியமங்களையும் விரிவாக எடுத்துச் சொன்னார் ஸ்வாமிகள். வந்தவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு மகா பெரியவரை நமஸ்கரித்து விட்டு உற்சாகமாகக் கிளம்பினர். 

காஞ்சிப் பெரியவர் சொன்ன நாளில் குறிப்பிட்ட அந்த ஹோமத்தை சென்னையில் செய்தார்கள். மகா பெரியவா சொன்ன நியமத்துக்கு அந்த ஹோமம் முடிந்தவுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டும். ஆனால், அந்த அளவுக்கு மழை இல்லை. ஏன் என்று எவருக்கும் காரணம் தெரியவில்லை. 

அடுத்த ஓரிரு நாட்களில் இந்த ஹோமம் நடத்திய அன்பர்களை மீண்டும் காஞ்சிக்கு வரச் சொல்லித் தகவல் அனுப்பினார் காஞ்சி ஸ்வாமிகள். போனார்கள். 

காஞ்சிப் பெரியவரிடம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, ‘ஹோமம் பண்ணினோம். ஆனா, எதிர்பார்த்த மழை இல்லே’ என்றனர் குறையாக.

காஞ்சிப் பெரியவர் முகம் மாறியது. ‘எப்படிடா மழை வரும்? உப்பு எதுவும் எடுத்துக்காம பத்தியம் இருந்து இந்த ஹோமத்தைப் பண்ணணும். ஆனா, வந்திருந்த ஒருத்தர் இதை மீறிட்டாரே’ என்றாராம்.

அந்தக் குழுவினருக்கு அதிர்ச்சி. காஞ்சி ஸ்வாமிகளிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு சென்னை திரும்பினார்கள். பிறகு, காஞ்சிப் பெரியவர் சொன்ன விஷயம் உண்மைதான் என்பதை விசாரித்து அறிந்து கொண்டார்கள். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து நல்ல மழை பெய்தது, அந்த மகானின் கருணையே!
எனவே, எந்த ஒரு ஹோமம் என்றாலும், அதற்குரிய சிரத்தையையும் மரியாதையையும் நாம் தர வேண்டும். அவை இல்லாமல் செய்யப்படும் ஹோமம், யாருக்கும் எந்தப் பலனையும் தராது.

கர்ம சிரத்தையுடன் செய்யப்படும் வழிபாடும், ஹோமமும் கூடுதல் பலன்களைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

(இன்னும் வரும்)

www.danvantripeedam@gmail.com


No comments:

Post a Comment