தன்வந்திரி பகவானுக்குபுஷ்ப யாகம்!
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆயிரம் கிலோ புஷ்பங்களால் தன்வந்திரி பகவானுக்கும் ஆரோக்யலட்சுமிக்கும் புஷ்ப யாகம் நடைப்பெற்றது.
ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் (31.10.2014) உலக மக்களின் பல்வேறு விதமான உடல் ரீதியான நோய்கள் மற்றும் மன ரீதியான நோய்கள் நீங்கவும் மகிழ்ச்சி கிடைக்கவும் ஐஸ்வர்யம் பெருகவும் நடைபெற்றது, இதில் ரோஜா, மல்லிகை, சாமந்தி, அலரி போன்ற பல வகையான புஷ்பங்களால் தன்வந்திரிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பகவானைத் தினமும் பக்தியுடன் பூஜிக்கும் அனுபவத்திற்கு இணையான அனுபவம் வேறு எதுவுமில்லை.
இப்பிறவியில் மட்டுமல்ல; இதற்கு முன் நாம் எடுத்துள்ள பல பிறவிகளில் செய்துள்ள பாவங்களையும், அத்தகைய பாவங்களினால் ஏற்படும் தோஷங்களையும், தோஷங்களினால் ஏற்படும் துன்பங்களையும் போக்குகிறது, தினமும் நாம் பகவானைப் பூஜிப்பதால் ஏற்படும் புண்ணிய பலன்!
எம்பெருமானை நம் குழந்தை போல் பிரேமையுடன் பூஜிக்கவேண்டும் என மகத்தான வைணவ மகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜர் அருளியுள்ளார். அதாவது, நம் குழந்தை மீது நாம் எத்தகைய பிரேமையையும், பாசத்தையும் வைத்திருக்கிறோமோ, அதே பாசத்தையும் பிரேமையையும் நாம் ஆராதிக்கும் பெருமானிடம் வைக்கவேண்டும் என்பது பொருள்.
அவரவர் மனோபாவத்திற்கு ஏற்ப, பகவானை ஆராதித்து, அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்கவேண்டும். சிலர் எம்பெருமானின் திருமேனி விக்கிரகத்திற்கு உயர்ந்த ஆடைகளை அணிவித்து ஆனந்தப்படுவார்கள். வேறு சிலர், உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அவனது அழகு திருக்கோலத்தைத் தரிசித்து மகிழ்வர். வேறு சிலர், பகவானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து ஆனந்தப்படுவதுண்டு. நறுமணம் கொண்ட அழகான தூய மலர்கள் நம் பாரத புண்ணியபூமியில் ஏராளமாகப் பூக்கின்றன. அவை அனைத்தும் இறைவனின் நந்தவனமாகிய இப்பூமியில் மலர்கின்றவையே!
இத்தகைய மலர்களை மாலையாகத் தொடுத்து பகவானுக்கு அணிவித்து அவனது பேரழகைத் தரிசித்து ஆனந்திப்பது, அம்மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது ஆகியவை பக்தர்கள் யுகம் யுகமாகச் செய்து மகிழும் புஷ்ப கைங்கர்யமாகும்.
புஷ்ப கைங்கர்யம் செய்து மகிழ்ந்த மகான்கள்!
திருமலை திருவேங்கடவன் திருச்சந்நிதியில் ஸ்ரீஅனந்தாழ்வான் என்ற தன்னிகரற்ற பாகவதோத்தமர், திருமலையில் நந்தவனத்தை ஏற்படுத்தி, தன் மனைவியுடன் அந்த நந்தவனத்தைப் பராமரித்து, அதில் பூக்கும் உயர்ந்த ஜாதி மலர்களை மாலைகளாகத் தொடுத்து திருவேங்கடத்து இன்னமுதனுக்குச் சாற்றி, அந்த அழகுத் திருக்கோலத்தைத் தரிசித்து பரமானந்தப்படுவது அவரது வழக்கம். புஷ்ப கைங்கர்யம்.
இதேபோன்று திருவரங்க திருத்தலத்தில் விப்ரநாராயணர் என்னும் பரமபக்தர் நந்தவனம் அமைத்து திருவரங்கப் பெருமானுக்குத் தினமும் மலர்மாலை தொடுத்துக் கொடுக்கும் அரும்தொண்டினைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்து மகிழந்தவர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள், தினமும் மலர் மாலை தொடுத்து, அதனை மானசீகமாக அரங்கனுக்குச் சாற்றி மகிழ்வது வழக்கம்.
இவ்விதம் அழகிய மணவாளனுக்குத் தான் தொடுத்த மலர் மாலையைச் சாற்றுவதற்குமுன், அந்த மலர்மாலையுடன் எப்படி அரங்கன் பிரகாசிப்பான் என்று கற்பனை செய்து பார்ப்பதற்காக, அந்த மாலையைத் தானே அணிந்துகொண்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று, தன்னைத்தானே பார்த்து ஆண்டாள் மகிழ்வாள்!
இதேபோன்று ஸ்ரீ வியாக்ரபாத முனிவர், மலர்கள் மலர்வதற்கு முன்பே பறித்து, அவற்றைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பது வழக்கம். சூரிய உதயத்தில் மலர்கள் மலர்ந்தவுடன், அவற்றிலுள்ள தேனைப் பருகுவதற்காக வண்டுகள் பூக்களை மொய்ப்பதுண்டு. இதனால் அம்மலர்களின் தூய்மை, வண்டுகளின் எச்சில் பட்டு, போய்விடுமே என்று எண்ணிய ஸ்ரீவியாக்ரபாத முனிவர் இரவிலேயே மரங்களின் மீது ஏறி புஷ்பங்களைப் பறித்து விடுவார்.
இவ்விதம் உயர்ந்த ஜாதி மலர்களைக் கொண்டு பகவானைப் பூஜிக்கும் முறையை பெரிய அளவில் செய்வதற்கு புஷ்ப யாகம் என்று பெயர். இத்தகைய புஷ்ப யாகம் திருப்பதி-திருமலை ஏழுமலையானின் திருச்சந்நிதியில் புஷ்ப யாக உற்சவமாக மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ஆசை ஒரு பக்கம் இருக்க, வருடத்தில் ஒருநாள் புஷ்ப யாகம் செய்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.
புஷ்ப யாகம்!
இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தினமும் எம்பெருமானுக்குச் சாற்றப்படும் மலர் மாலைகள் மற்றும் அர்ச்சனை, ஆராதனைகள் ஆகியவற்றுக்கு உபயோகப்படுத்தப்படும் புஷ்பங்களில் குறைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். பல திருக்கோயில்களில் பணவசதி குறைவாக இருக்கும் காரணத்தினால் பெருமானுக்குத் தினமும் புதிதாக மலர் மாலை கள் சாற்ற முடியாமல் குறைகள் ஏற்படுவதுண்டு. பல காரணங்களினால் பல திருக்கோயில்களுக்குத் தினமும் அர்ச்சனை செய்வதற்கு துளசி மற்றும் மலர்கள் எதுவும் கிடைப்பதில்லை. இத்தகைய குறைகள் பகவானின் சான்னியத்தியத்தைப் பாதிக்கக்கூடும். இவற்றை சரிசெய்வதற்காகவே திருக்கோயில்களில் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.
புஷ்ப யாகம் செய்வது மிகவும் கடினமானது. உயர்ந்த, தரமான புஷ்பங்கள் நிறைய வேண்டும். மேலும், ஆச்சார அனுஷ்டானங்களில் உயர்ந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு புஷ்பத்தை முதலில் அக்னியில் பிரதிஷ்டை செய்து, அதன்பின் அந்தப் புஷ்பங்கள் அனைத்தும் எம்பெருமானின் திருமேனி மீது மந்திரப் பிரயோகத்துடன் அர்ச்சிக்கப்படுகின்றன.
முதலில் துளசிகளைக் கொண்டு எம்பெருமானின் திருவடிகளில் அர்ச்சிக்கப்படுகிறது. அதன்பின்பு, உயர்ந்த பல நிறமுள்ள புஷ்பங்கள் அவரது திருவடிக்கும் கீழே இருந்து ஆரம்பித்து, அவரது திருமார்பு அளவுவரை வேத மந்திரங்கள், மற்றும் திவ்யப் பிரபந்த பாசுரங்கள் முழங்க சாற்றிக்கொண்டாடப்படுகிறது.
இத்தகைய புஷ்ய யாகத்தில் நிகழும் மெய்சிலிர்க்க வைக்கும் ஆனந்த அனுபவம் ஒன்று பக்தர்களுக்கு ஏற்படுவதை அனுபவத்தில் காணமுடிகிறது. மிகப் பெரிய அளவில், உயர்ந்த ஜாதிப் பூக்கள் அனைத்தும் பகவானின் திருவடிகளில் சேர்ப்பிக்கும்போது, புஷ்பங்களின் நிலை உயர்ந்து கொண்டே சென்று, பகவானின் விக்கிரக திருமேனியைச் சிறிது சிறிதாக மறைக்கும்போது, கூர்ந்து பக்தியுடன் கவனித்தால், எம்பெருமானின் உதடுகள் சற்று விரிந்து புன் னகை மலர்வதைக் காணமுடியும். புஷ்பயாகத்தினால் எம்பெருமான் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.
No comments:
Post a Comment