Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, September 25, 2014

இயற்கை வளம் வேண்டி 8.10.2014 புரட்டாசி பௌர்ணமி அன்று தன்வந்திரி பீடத்தில் சாகம்பரி யாகம்

சகல வளங்களும் அருளும் சாகம்பரி தேவி
அன்னை பராசக்தி பக்தர்களைக் காக்க பல்வேறு திருக்கோலங்களில் தோன்றுகிறாள். அவற்றுள் ஒன்றுதான் சாகம்பரி தேவியாவாள்.

சாகம்பரி தேவி யார்? அவள் மகிமைகள் என்ன?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையாக தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக்  கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும் மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின. மேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண்ணிய பலன்களும் பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான் அவன். அதனால் ஆணவம் கொண்டு  முனிவர்களைத் துன்புறுத்தினான்; அனைவருக்கும் பல கொடுமைகள் இழைத்தான்.

அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த  புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை. முனிவர்களும் ரிஷிகளும் யாகம், பூஜை என்ற தம் நித்திய கடமைகளைச் செய்ய முடியாமல், உயிருக்கு பயந்து குகைகளிலும், மறைவிடங்களிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்விப்பதற்கான யாகங்கள் நடைபெறவில்லைஅதனால் மழை பொய்த்துப் போனது. பயிரினங்கள் கருகின. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ்சம், அன்ன ஆகாரம் இன்றி உயிரினங்கள் மடிந்தன.

அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச் சாரலில் ஒன்று கூடி பராசக்தியை நோக்கி, ‘‘தேவி! கருணையே வடிவான உனக்கு பக்தர்களின் கஷ்டங்கள் தெரியாதா? பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா?’’ என வேண்டினர். இந்த பிரபஞ்சத்தையே படைத்த  பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப் பயிர், காய் கனிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில  நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையாகப் பொழிந்தன.
உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி, தன் பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்கத் தீர்மானித்தாள். நெருப்பு வளையம் ஒன்றை உருவாக்கி, அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர்கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர். யாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும்! அதனால்  தேவி அழிக்கும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவே அவனை அழிக்கும் வளையமுமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று  தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். அதனால் பலன்களை இழந்த  துர்க்கமனை தன் சூலாயுதத்தால் அழித்தாள்.

உலக மக்களின் பஞ் சத்தைக் கண்டு மனம் வருந்தி, தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் வெள்ளமாகப் பெருக, ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரிகுளங்களையெல்லாம் நிரம்பின. தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர, உலகம் சுபிட்சமானது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்றும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்றும் அழைத்து, பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்று முதல் சாகம்பரி தேவி வழிபாடு தொடர்கிறது. துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு.

சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப்  பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படும்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங் கப்படுகிறாள். அன்று முதல் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது  என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்படுகிறது. எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை காய்கறி, கீரை வகைகள்  உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப்பந்தல் உருவாக்கி மகிழ்வர்.

சில ஆலயங்களில் அம்பாள், மற்றும் ஈசன் சந்நதியில்  பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர். பின் கயிற்றில் காய்கறிகளையும் பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடுவர். அனைத்து விதமான காய்கறிகளையும் கீரைகளையும் பசுமைத் தோரணமாகக் காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும். நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். இதைக் கண்டுகளிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வருவார்கள்.

ஆதிசங்கரர் இந்த சாகம்பரி தேவியைப் பற்றி தன் கனகதாராஸ்தவத்தில் குறிப்பிட்டுள்ளார்:
கீர்தேவதேதி கருட த்வஜ ஸுந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேஷ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ் தருண்யை

அதாவது, ஒரே பரமாத்மா, த்ரிமூர்த்திகளாகி ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் என விளையாடும்போது அவர்களின் மனைவியர் வடிவில் தனித்தனி சக்தி யாக இருப்பது மகாலட்சுமியேதான் என்கிறார். அவர்கள் கீர்தேவதை, கருடத்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசி சேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நான்கு சக்திகளைக் கூறுவானேன்? பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் வரிசையின்படி முதலில் பிரம்மனின் மனைவி கீர்தேவதை எனும் வாக்தேவியான சரஸ்வதி; அடுத்தது கருடக்கொடியுடைய திருமாலின் ரூபலாவண்யம் மிக்க கருடத்வஜஸுந்தரி, துதியின் நேர் மூர்த்தியான லட்சுமி; அப்புறம் ருத்ர பத்தினிகளாக மட்டும் இரண்டு பேர் -சாகம்பரி என்றும் சசிசேகர வல்லபா என்றும் இருக்கிறது.

பஞ்சகாலத்தில் தேவி தன் சரீரத்திலிருந்தே காய்கறிகளை உண்டு பண்ணி பக்தர்கள் உண்ண அனுக்ரஹம் செய்தாள். அவளே சாகம்பரி. அவள் ஈசனுடைய சக்தியே. ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய என்று சொல்லியபடி பிரளயமான சம்ஹாரத்திற்கு உதவி செய்யாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் மக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து காத்திருக்கிறாள்! த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நான்காவதாக ஒன்றை ஏன் இப்படி ஆச்சார்யாள் சொல்லவேண்டும்? அவர் பொருத்தமாகத்தான் கூறியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை அவருக்கு நன்கு தெரியும். தனலட்சுமி, தான்யலட்சுமி முதலான அஷ்டலட்சுமி களைச் சொன்னாலும் லட்சுமி என்றால் தனத்தைத்தான் நினைப்பார்கள் என்று அவருக்குத் தெரியும்.
ஆனால், தனத்தை சாப்பிட முடியுமா? அதனால் சாப்பாடு தரும் அம்பிகையை லட்சுமியாகக் குறிப்பிடாமல் விடக்கூடாது என்று கருதியே சாகம்பரியைக் குறிப்பிட்டார். அப்புறம் பிரளயத்திற்கு சுவாமியான ருத்ரனின் சக்தியை, சசிசேகரவல்லபா என்றார். அப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவரின் பிரியமான பத்தினி. சம்ஹார மூர்த்தியே மகேஸ்வரனாக மாயா நாடக லீலை நடத்தும்போதும் சதாசிவனாக மோட்சத்தையே அனுக்ரஹம் செய்யும் போதும்கூட சசிசேகரனாகத்தான் இருக்கிறார். எனவே, படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்தொழில்களையும் புரியும் பரப்பிரம்ம சக்தி பல்வேறு வடிவங்கள் எடுத்தாலும் அவை ஒன்றே என்பது நிரூபணமாகிறது.

லட்சுமிதான் சரஸ்வதி, பார்வதி என்று சொன்னபின் சிவ-விஷ்ணு-பிரம்மாவை மட்டும் வித்தியாசம் பாராட்ட முடியுமா? எனவேதான் அந்த ஸ்லோகம்த்ரிபுவநைக குரோஸ்தருணி என்று முடிகிறது. திரிபுவனங்களுக்கும் குருவாக இருப்பவர் மகாவிஷ்ணு. அவரின் பிரிய சக்தி லட்சுமி என்று அர்த்தம். ட்சிணாமூர்த்தியின் மூல குரு வடிவத்திலிருந்து அவதரித்த மகாவிஷ்ணுவைச் சொல்லும்போதும், மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய நான்முகனைச் சொல்லும்போதும், பேதங்கள் மறைந்து போகின்றன.

சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.

சாகம்பரி த்யானம்
ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்

சாகம்பரி காயத்ரி
ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

மேலும் விபரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை-632513.
வேலூர் மாவட்டம்
தொலைபேசி : 04172-230033
செல் : 9443330203
Website : www.dhanvantripeedam.com, 
                 www.danvantripeedam.blogspot.in, 
                 www.danvantritemple.com, 
                 www.mahapeedam.com
                 e-Mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment