Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 2, 2013

ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி

தத்தாத்ரேயர் அவதாரம்
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாகத் திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரப்பிரம்ம வடிவமே.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்தக் கருத்தைச் சொல்ல வந்தது தான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்சீவியாகப் போற்றப்படுகிறார்.

கற்பின் மேன்மை
அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாகப் பிறக்க வேண்டுமென விரும்பினாள்.

இதனை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் யோசனை தெரிவித்தனர்.

எப்படியும் இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படிக் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “ பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்", என்றனர்.
அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், ‘பதிவிரதா’ தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு. “கணவருக்குப் பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, “நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்.." எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்.

உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகிவிட்டனர். தனக்குப் பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்குப் பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தரக் கேட்டனர். அவர்களிடம், “உங்கள் கணவன்மார் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். “ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்” என்று கூறி, மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்த்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட தத்தாத்ரேயரை நாமும் ப்ரார்த்தனை செய்து தீராத வயிற்றுவலி, இதய நோய், புத்தி சுவாதீனமின்மை, சத்ரு உபாதை, கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுபடவும், பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.

எனவே 3.6.2013 திங்கட்கிழமை அன்று தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு உலக நலன் கருதி பீடத்தில் உள்ள தத்தாத்ரேயருக்கு சிறப்பு அபிஷேகமும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment