Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, November 9, 2019

Aippasi Annabhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆனந்தம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!

வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை மதியம் மரகதேஸ்வரருக்கும் மாலை ராகு கேதுவிற்கும் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

சாம வேதத்திலே ஒரு இடத்தில் அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோஎன்று கூறப்பட்டுள்ளது,

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

ஐப்பசி மாதத்தில் தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுவதாக கூறுகிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும்.

சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட் கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு : ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

தன்வந்திரி பீடத்தில் அன்னாபிஷேகம் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை மதியம் 12.00 மணியளவில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

மரகத லிங்கத்தை மூன்று பகுதிகளாக பிரிட்து கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். போன்ற எல்லா பாகங்களுக்கும் அன்னாபிஷேகம் ஈஸ்வரனுக்கு முழுமையாகவே செய்யப்பட உள்ளது.

மேலும் பகவான் சன்னதியில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் பாராயணமும் நடைபெறும். நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைக்கும் என்பதை அன்னாபிஷேக பிரசாதத்தை நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நீரில் கரைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அன்ன பிரசாதத்துடன் சாம்பார், தயிர், மோர் சேர்த்து நோய் நொடிகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் மஹா பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

தொழில், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள், நஷ்டப்பெட்டவர்கள் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டு இறை பிரசாதத்தை உண்டு, சிறந்த முறையில் வியாபாரம் நடைபெறவும், குழந்தைகள் ஆரோக்யம், கல்வியில் முன்னேற்றம் அடையவும், ஞாபக சக்தி பெருகவும், புத்ர பாக்யம் கிடைக்கவும், உணவு தட்டுபாடு அகலவும், தன தான்ய சம்பத்துகள் பெருகவும், இயற்கை வளம் பெருகவும், ஆய கலைகள் வளரவும், கிராம நகர அபிவிருத்தி உண்டாகவும், குடும்ப மகிழ்ச்சிக்காகவும்,  பிரார்த்தனை செய்வோம்.

ஏகரூப ராகு கேதுவிற்கு பிரதி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் :

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் மாலை 5.00 மணிக்கு ஏகரூப ராகு கேதுவிற்கு உணவு குழலில் ஏற்படும் தோஷங்கள் அகலவும், ராகு கேதுவினால் ஏற்படும் தடைகள் விலகவும், அன்னதோஷம் அகலவும், குடும்பத்தில் பல்வேறு விதமான சுப காரியங்கள் நடைபெறவும், தன தானிய சம்பத்து பெருகவும் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

மேலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் பல்வேறு சிறப்புகள் தரும் என்பதால் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இவ்விரு அன்னாபிஷேகத்திலும் பக்தர்கள் பங்கேற்று நாடு நலம் பெறவும், குடும்ப நலம் பெறவும் பிரார்த்திப்போம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment