Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 27, 2013

முப்பெரும் விழா

ஸ்ரீ தன்வந்திரி பகவான்


365 நாள் 365 யாகம் நிறைவு விழா
தாயாரின் 18 ஆம் ஆண்டு குருபூஜையுடன் 
468 சித்தர்களின் யாகத் திருவிழா
8&ஆம் ஆண்டு அன்னதானப் பெருவிழா


ஆத்மார்த்தமாக ஒரு ஹோமம் செய்தாலே, என்னென்ன இனிய நல்மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைக் கவனித்திருக்கிறோம். இந்த நிலையில் ‘நித்தமும் ஹோமம்... நித்தமும் அக்னி வாசம்’ என்று திகழும் இந்த வாலாஜாபேட்டை யக்ஞ பூமியில் தினமும் நடந்து வருகிற யாகங்களின் சிறப்புக்கும் மகிமைக்கும் கேட்பானேன்! தங்களது தேவைக்கு ஏற்ப இங்கு வந்து யாகங்கள் செய்து, பலன் பெற்றவர்களின் எண்ணிக்கை இதுவரை பல்லாயிரத்தையும் தாண்டும் என்றால், அது மிகை இல்லை.

சரியாக ஒரு வருடம் முன்பு, அதாவது, கடந்த 26.4.2012 அன்று ஆன்மிக அன்பர்களும், அருளாளர்களும் பெருமளவில் திரண்டிருக்க... ‘365 நாள் 365 யாகம்’ என்கிற வைபவம் துவங்கியது. 

அதன்படி, தினமும் ஒரு ஹோமம் என்று சிறப்பாக ஆரம்பமாகி, இந்த மாபெரும் வைபவம் 25.4.2013 இன்று பூர்த்தி ஆகி இருக்கிறது. இதில் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், குருவாரத்தில் (வியாழக்கிழமை) தொடங்கி, குருவாரத்திலேயே பூர்த்தி ஆனது என்பதுதான்!

  • இந்தப் பிரமாண்டமான யாகத் திருவிழா துவங்குவதற்கு முன், சொற்பொழிவாளரும் ஆன்மிக எழுத்தாளருமான திரு. பி. சுவாமிநாதன் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘365 நாள் 365 யாகம்’ என்ற நூல் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் அவர்களால் வெளியிடப்பட்டுப் பக்தர்களின் பார்வைக்காக வழங்கப்பட்டது. 

அந்த நூலில் குறிப்பிட்டிருந்தபடி ஒவ்வொரு தினமும் என்ன யாகமோ அதற்கேற்றாற் போல் திரவியம், புஷ்பம், பழம், நிவேதனம் முதலியன அக்னியில் சேர்க்கப்பட்டன. அன்றைய தேதியில் என்ன ஹோமம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த தேவதைக்கு உண்டான மந்திரம், பழம், புஷ்பம், திரவியம், நிவேதனம் போன்றவை சிவாச்சார்யர்களால் அர்ப்பணிக்கப்பட்டன.

  • இந்த ஒரு வருடத்தில் 365 யாகங்களும் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் பூர்த்தி ஆக வேண்டும் என்பதற்காகப் பல அன்பர்கள் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். இந்தப் பீடத்தின் சேவகர்கள், தன்னார்வத் தொண்டர்கள், நலம் விரும்பிகள், உள்ளூர் மெய்யன்பர்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பங்களிப்பை ஆத்மார்த்தமாக இந்த யாகங்களுக்கு அர்ப்பணித்தார்கள். அனைவருக்கும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில் உளப்பூர்வமான நன்றிகள்! 
  • அன்றாட ஹோம காரியங்கள் சிறப்பாக நடப்பதற்கு மிகுந்த அக்கறையோடு செயல்பட்டவர்கள், வேலூர் சிவஸ்ரீ அருணாசல சிவாச்சார்யர் மற்றும் ஆரணி சிவஸ்ரீ பாலாஜி சிவம் ஆகியோர் ஆவார்கள். 
  • இந்த இருவரும் சிரமம் பாராது உழைத்தவர்கள். தினமும் இருவருமே அல்லது இருவரில் ஒருவர் ஆரோக்ய பீடம் வந்து இந்த ஹோம காரியங்களை சிரமேற் கொண்டு நடத்தி, நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். வருகின்ற பக்தர்களிடம் இன்முகத்துடன் நடந்து, ஹோமத்தை அவர்கள் திருப்திப்படும் அளவுக்கு நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். மனிதர்கள் என்றால், அவர்களுக்கு ஏதேனும் ஒரு சங்கடம் அல்லது அசந்தர்ப்பம் நேரலாம். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளோடு இந்த இருவரும் உழைத்தது எங்களுக்குப் பெருமை. 
  • இந்த இருவரோடு, இந்த யாகங்களை நடத்திய ஏனைய சிவாச்சார்யர்கள் அனைவரும் வெகு சிரத்தையாக நடத்தி, அதில் இட வேண்டிய பொருட்களில் எந்த ஒரு குறைவும் வைக்காமல், மந்திர உச்சரிப்பு, நிவேதனம் போன்ற அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றினார்கள்.
  • தொடர்ந்து ஒரு வருடம் நிகழ்ந்த இந்தத் தொடர் யாகத்தின் நற்பலனைப் பல நூறு பக்தர்கள் தங்கள் வாழ்வில் ஆனந்தமாக அனுபவித்திருக்கிறார்கள் என்பது கண்கூடு. இந்த யாகங்களில் பங்கு கொண்டதன் பலனாக, அவர்கள் பிரார்த்தித்த கோரிக்கை பூர்த்தி ஆனது குறித்து ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளிடம் தங்களது மகிழ்வைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  
  • அதாவது திருமண வரம் வேண்டி இந்த யாகத்தில் கலந்து கொண்டவர்கள் (ஸ்வயம்வர கலா பார்வதி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம்) தங்களுக்கு ஏற்ற மணமகன்/ மணமகள் கிடைக்கப் பெற்றார்கள். ஹோமத்தில் கலந்து கொண்டதன் பலனாகத் தங்களுக்குத் திருமண ஏற்பாடு ஆகி உள்ளது என்று பீடத்துக்கே நேரில் வந்து திருமணப் பத்திரிகை கொடுத்துத் தங்களது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • சொந்தமாக வீடு அமைய வேண்டி இங்கு நடைபெற்ற ஹோமத்தில் கலந்து கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பு/ தனி வீடு/ மனை வாங்கும் யோகம் போன்றவற்றைப் பலரும் பெற்றிருக்கிறார்கள்.
  • ஸ்ரீகார்த்தவீர்யார்ஜுனருக்கு ஹோமம் மற்றும் வழிபாடு செய்து, காணாமல் போன பொருட்களைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். காணாமல் போன குடும்பத்து நபர்கள் மீண்டும் வரப் பெற்றிருக்கிறார்கள். இழந்த பதினாறு செல்வங்களையும் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். தங்கள் குடும்பத்துக்குள் நிலவிய சொத்துத் தகராறு தீர்ந்து, கிடைக்க வேண்டிய செல்வத்தை சுபமாகப் பெற்றிருக்கிறார்கள்.
  • தங்கள் பயிர் பச்சை செழிக்க இங்கே யாகம் செய்த விவசாயிகள் உரிய நேரத்தில் மழை பொழியப் பெற்றிருக்கிறார்கள். அமோக விளைச்சலைக் கண்டிருக்கிறார்கள். 
  • அறிவியல், ஆன்மிகம், ஜோதிடம் போன்ற பல அம்சங்களும் கலந்து அமையப் பெற்ற இந்த 365 ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டுமன்றி, இந்த வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடமும் பல நற்பலன்களைப் பெற்றுள்ளது என்பதை இந்த வேளையில் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
  • ஐரோப்பிய நாடான இத்தாலியில் இந்த பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. ‘மாற்று மருத்துவத்தில் ஆன்மிக அறிவியல்’ என்பதற்கான இந்த டாக்டர் பட்டத்தை இத்தாலிக்கே ஸ்வாமிகளை அழைத்துக் கொடுத்துக் கௌரவித்திருக்கிறார்கள்.
  • கயிலாய மலையையும், முக்திநாத்தையும் தரிசிக்கும் பாக்கியத்தை இந்தக் காலத்தில்தான் நம் ஸ்வாமிகளுக்கு இறைவன் வழங்கி இருக்கிறார்.
  • 365 ஹோமங்கள் ஒரு புறம் தினமும் தொடர்ந்து வந்தாலும், 108 கணபதி ஹோமம், 74 பைரவர் ஹோமம், 468 சித்தர் ஹோமம் மற்றும் எண்ணற்ற சண்டி யாகங்கள், நிகும்பலா ஹோமங்கள், பிரத்யங்கிரா ஹோமங்கள், 1008 பூசனிக்காய் யாகம், அதிருத்ரம், பஞ்ச திருக்கல்யாணம், இப்படி ஏராளமான வைபவங்கள் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்து, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் அடையாளத்தை, முக்கியத்துவத்தை உலகம் முழுதும் பறை சாற்றி இருக்கிறது.
  • இந்தக் காலகட்டத்தில் நவ பைரவர், பால ரங்கநாதர், கூர்ம லக்ஷ்மி நரசிம்மர் என்று புதுப் புது விக்கிரங்கள் பீடத்தில் பிரதிஷ்டை ஆகின. இவ்வளவு ஹோமங்களை எடுத்துச் செய்கின்ற, புனிதமான ஒரு நற்காரியத்தை அங்கீகரிக்கும் வண்ணம் இத்தனை விக்கிரகம் இந்த ஒரு வருட காலகட்டத்தில் பிரதிஷ்டை ஆகி உள்ளதாக ஒவ்வொரு பக்தரும் பெருமைப்படலாம்.
  • யோகா மையம், இயற்கை மற்றும் ஆராய்ச்சி மையம் புதிதாக இங்கு துவக்கப்பட்டு, அக்கம்பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் பயன் பெற்று வருகிறார்கள்.
  • மதிய வேளையில் தினமும் சுமார் 50 பேர் வரை அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. இந்த 365 யாகம் துவங்கியதில் இருந்து தினமும் மதிய வேளையில் அன்னதானம் பெறுவோரின் எண்ணிக்கை சுமார் 300 ஆக உயர்ந்து, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர, பிற நேரங்களில் வந்து செல்லும் பக்தர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஒரு நிரந்தர சிற்றுண்டி மையமும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்டின் ஏ.டி.எம். மையம் ஒன்று, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள் பயன் பெறும் வகையில் இதே வளாகத்திலேயே திறக்கப்படவுள்ளது.
  • பிரமாண்டமான பைரவர் ஹோமம் மறுநாள் நடக்க இருந்த நிலையில், முதல் நாள் இரவு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் அதைச் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு சில கிராமங்களில் மட்டுமே பெய்த பெருமழையானது ஹோமத்துக்கான ஏற்பாடுகளுக்கு சேதம் விளைவித்தது. அதோடு, திடீரென விழுந்த ஒரு இடி, ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் கலசத்தை லேசாகப் பதம் பார்த்து, பீடத்தின் விமானத்தில் ஒரு சில கீறல் விழுந்தது.
  • எங்கோ இந்த இடி விழுந்திருந்தால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கும் என்பது மறுநாள் கண்டறியப்பட்டது.
  • தன்னை அண்டி இருக்கும் மக்களுக்கு இந்த இடியால் எந்த விதமான துயரமும் நேரக் கூடாது என்பதற்காக அந்த இடியைத் தானே ஏற்றுக் கொண்டார் ஸ்ரீதன்வந்திரி பகவான். இதனால், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்ற கும்பாபிஷேக வைபவம், ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு எட்டே வருடங்களில் கிடைத்தது; இதுவும் இந்தக் காலகட்டத்தில்தான்!
  • சரஸ்வதி, ராகு, கேது ஆகிய தெய்வத் திருவுருவங்கள் இடப் பெயர்ச்சி செய்யப்பட்டுப் புதிதாக மண்டபம் நிர்மாணிக்கப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்! மேலும் பைரவர், பாபாஜி மண்டபமும் கட்டப்பட்டது.
  • எப்போதும் அக்னி பகவான் வாசம் செய்து கொண்டிருக்கும் யாக சாலை, நிரந்தரமான கூரையுடன் திருத்தி அமைக்கப்பட்டது.
  • பீடத்தின் முகப்பில் பிரதிஷ்டை ஆகி இருக்கிற ஸ்ரீவிநாயகர்/ ஸ்ரீதன்வந்திரி விக்கிரகத்திற்கு  விசேஷ விமானம் அமைக்கப்பட்டது.
  • ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நிகழ்ந்து வரும் பல நற்பணிகள் குறித்துக் கேள்விப்பட்ட பல்வேறு நாட்டு வல்லுநர்கள் சிலர் பீடத்துக்கே நேரில் வந்து, தாங்கள் கேள்விப்பட்ட தகவல்களை ஊர்ஜிதம் செய்து கொண்டதுடன், இயற்கை மருத்துவம், மூலிகைகள் குறித்துப் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி, இது குறித்து ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளிடம் விவாதித்தும் சென்றுள்ளனர்.
  • வேலூர் நாராயணி பீடம் அம்மா உட்பட பல மகான்கள், அமைச்சர் பெருமக்கள், இந்தியத் தேர்தல் துறை ஆணையர் வி.எஸ். சம்பத், மலேஷியப் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் டாக்டர் எஸ். கந்தசாமி உட்பட பல பிரமுகர்கள் இந்தக் காலகட்டத்தில் பீடத்துக்கு வருகை தந்தனர்.
  • ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி, பக்தர்களின் அனுபவங்கள் குறித்து ஆன்மிக மாத இதழான ‘கோபுர தரிசனம்’, ‘ஆன்மிக ஆலயம்’ போன்ற இதழ்களிலும், ‘பால ஜோதிடம்’ என்ற வார இதழிலும், ‘தினத்தந்தி’, ‘தினமணி’, ‘தினகரன்’, ‘தினமலர்’ ‘மக்கள் குரல்’ போன்ற நாளிதழ்களிலும், சாக்ஷி, ஈநாடு போன்ற பிற மொழி நாளிதழ்களிலும், ‘மைசிக்சர்’, ‘சென்னை லைவ் நியூஸ்’ போன்ற இணைய தளங்களிலும் தொடர் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கின.
  • ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பாக டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தொகுத்து வழங்கிய ‘வாழ்வியல் சித்தர்கள்’, கவிஞர் ச. இலக்குமிபதி எழுதிய ‘ஆனந்த வாழ்க்கை’, பி. சுவாமிநாதன் தொகுத்து வழங்கிய ‘அனுபவங்கள் அற்புதங்கள்’, பீடம் குறித்து திருமதி பத்மா மற்றும் தோழியர்ளால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அரசியல் ஆசான், எழுத்தாளர், ‘துக்ளக்’ ஆசிரியர் திரு.சோ அவர்களால்  முன்மொழியப்பட்டு வெளியான ‘லைஃப்பாலஜி’ எனும் ஸ்தல வரலாறு புத்தகம், ‘எனதருமை மகனே, மகளே’ கையேடு புத்தகம், மேட்டூர் பிரதர்ஸின் ஆரத்தி/குருபீடம் என்கிற குறுந்தகடு போன்ற அனைத்தும் இந்தக் காலகட்டத்தில் வெளியானது ஸ்ரீதன்வந்திரியின் திருவருளே!
  • எத்தனையோ ஆலயங்களின் திருப்பணிக்கும், கும்பாபிஷேகத்துக்கும் நிதியுதவி வழங்கி இருக்கிறார் நம் ஸ்வாமிகள்.
  • பீடத்தின் ஆன்மிகப் பணிகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு சமுதாயப் பணிகளுக்கும் முக்கியத்துவம் தருபவர் நம் ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள். போதிய வசதி வாய்ப்பு இல்லாதவர்களின் கல்வித் தேவைக்கு, திருமண உதவிக்கு, வேலைவாய்ப்புக்கு, இயற்கைச் சீற்றத்தில் பாதித்தோருக்கு, உடல் ஊனமுற்றோர்க்கு என்று கூடுதலான பல சேவைகளையும் இந்தக் காலகட்டத்தில் புரிந்திருக்கிறார்.
  • இவை எல்லாவற்றையும் விட ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் இரண்டாவது திருமகள் சௌபாக்கியவதி அனுராதா திருமணம் நிச்சயமானதும் இந்தக் காலகட்டத்தில்தான். பலரது திருமணப் பேறுக்கும் ஆசி தந்து அருளுகின்ற ஸ்ரீதன்வந்திரி பகவான், தனக்குத் திருச்சந்நிதி ஸ்தாபித்த ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் திருக்குமாரத்திக்குக் கோலாகலமான பாக்கியத்தைத் தந்தருளி இருக்கிறார். இந்தத் திருக்கல்யாணம் வருகிற மே மாதம் 27ஆம் தேதி நிகழ இருக்கிறது.
  • தாயாரின் 17 ஆம் ஆண்டு குருபூஜையுடன் 468 சித்தர்களின் யாகத்திருவிழா மற்றும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது.

சித்ரா பௌர்ணமியில் தாயாரின் 18 ஆம் ஆண்டு குருபூஜையுடன் 468 சித்தர்களின் யாகத் திருவிழா



ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள், தன் தாயார் ஸ்ரீமதி கோமளவள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக எழுந்ததே இந்த ஆரோக்ய பீடம். இன்று பலரது பிணிகளையும் தீர்த்து, ஒரு மாபெரும் மருத்துவ மையமாக இது விளங்குகிறது என்றால், அது அந்தத் தாயாரின் பரிபூரண அருள் அன்றி வேறில்லை.

அந்தத் தாயாரின் 18ஆம் ஆண்டு குருபூஜை தினமும் இதே தினத்தில்தான்!
தாயாரின் குருபூஜை தினம் என்பதாலும், பீடத்தின் சித்தர்கள் தினம் என்பதாலும், இன்று 468 சித்தர்களின் யாகத் திருவிழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. மஹா குண்டம் அமைத்து, 468 சித்தர் பெருமக்களுக்கும் யாகமும் நடைபெற்றது. இது வேறெங்கும் காண முடியாத அற்புதம்.



சித்தர்களைப் போற்றும் விதமாக இன்று ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 500 சாதுக்களுக்கு அன்னம் அளித்து வஸ்திரமும், அவர்களின் போக்குவரத்துச் செலவுக்கு உண்டான தொகையும் வழங்கப்பட்டது. 

8ஆம் ஆண்டு அன்னதானப் பெருவிழா





ஒரு மனிதரைத் திருப்தி செய்யக் கூடிய தானம்  அன்னதானம் ஒன்றுதான்! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’. அன்னதானத்துக்கு அவ்வளவு சிறப்பு.

முப்பெரும் விழாவில் மூன்றாவது பெரும் விழாவாகக் காலை முதல் இரவு வரை இந்தப் பீடத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 

இந்த முப்பெரும் விழாவில் அரசுத் துறை உயர் அதிகாரிகள், சாதுக்கள், சந்நியாசிகள், ஆதீனங்கள், மகான்கள், ஊடகத் துறை அன்பர்கள், சிவாச்சார்யர்கள், பிரபலங்கள், ஊர் முக்கியஸ்தர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், ஆன்மிகப் பெருமக்கள் மற்றும் அக்கம்பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் திரளாகக் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்றனர்.

தகவல்
தன்வந்திரி குடும்பத்தினர்.

No comments:

Post a Comment