Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 27, 2013

நலம் தரும் ஹோமங்கள்! பாகம் - 3


நவநீத கிருஷ்ணன்


எந்த ஒரு செயலுக்குமே சிரத்தைதான் முக்கியம். சிரத்தை இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியைத் தருவதில்லை என்று கடந்த பதிவில் சொல்லி இருந்தேன்.

இறந்தவர்களுக்கு வருடா வருடம் நாம் செய்யும் பித்ரு கடன்களை இதனால்தான் ‘சிராத்தம்’ என்று சொல்கிறோம். சிரத்தையுடன் & அதாவது போதிய அக்கறையுடன் அவர்களுக்கு உண்டான காரியங்களை நிறைவேற்றினால்தான், மேலுலகத்தில் இருக்கின்ற அந்த உள்ளங்கள் மகிழ்ந்து நாம் நிம்மதியாக வாழ அருள் புரிவார்கள்.

எந்த ஒரு ஹோமத்தையும் கடனே என்று செய்யக் கூடாது. ஹோமம் என்பதே பரிகாரம் தொடர்பான ஒரு சடங்கு. எனவே, அவரவர் செய்யும் வழிபாட்டுத் தன்மைக்கு ஏற்ப ஹோமங்களுக்கு உண்டான பலன் கிடைக்கும். 

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆசிரமத்தில் நடக்கின்ற அனைத்து ஹோமங்களும் வேத பண்டிதர்களின் வழிகாட்டுதலுடனும், அவர்களின் சீரிய தலைமையிலும் நடந்து வருகின்றன. எந்த ஒரு பரிகாரத்துக்கும் அதற்கு உகந்த நாளில் இங்கே ஹோமம் நடக்கின்றது. வியாபார அபிவிருத்தி, தொழில் போட்டிகளில் இருந்து மீளுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி, குடும்பம் தொடர்பான அனைத்து நலன்கள் & என எல்லாவற்றுக்குமே ஹோமங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. 

இங்கு நடக்கின்ற எண்ணற்ற ஹோமங்களுள் ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் ஒன்று. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் இதில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு எல்லா வசதியும் இருந்து வந்தது. ஆனால், ஒரே ஒரு குறை மட்டும் அந்த சக்ரவர்த்தியை ரொம்பவும் வேதனைப்பட வைத்தது. அதுதான் & புத்திர பாக்கியம்.

தசரத மகாராஜாவுக்கு அறுபதாயிரத்து சொச்சம் மனைவிகள். ஆனாலும், எந்த ஒரு மனைவி மூலமும் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. உரிய பண்டிதர்களின் ஆலோசனைப்படி ஒரு சில பரிகாரங்கள் செய்து பார்த்தும் பலன் இல்லை. எனவே, தன் குலகுரு வசிஷ்டர் மற்றும் மந்திரிமார்களின் ஆலோசனையைக் கேட்டார். அதன்படி வசிஷ்டர் அருளியதன் பேரில் ‘புத்திர காமேஷ்டி யாக’த்தை பிரமாண்டமாக நடத்தினார் தசரதர். 

மிகவும் சிரத்தையுடன் தசரதன் அனுஷ்டித்த அந்த யாகத்தில் மகாவிஷ்ணுவே நேரில் தோன்றி மன்னனை ஆசிர்வதித்தார். பிறகு தங்கத்தால் ஆன ஒரு பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து, ‘இதில் இருக்கின்ற ஹோம பிரசாதமான தேனை (பாயசம் என்றும் சொல்வர்) நீ விரும்பும் மனைவியர்களுக்குக் கொடு. அவர்கள் தாய்மைப் பேறு அடைந்து, உனது உள்ளம் குளிரும்படி பிள்ளைகளைப் பெற்றெடுத்துத் தருவார்கள். உனது ராஜ்யத்துக்கே அவர்கள் பெருமை சேர்ப்பார்கள்’ என்று அருளி மறைந்தார். அதன்படி அருட் பிரசாதமான தேனை தன் மனைவியர்களான கௌசல்யா, சுமித்திரா மற்றும் கைகேயி ஆகியோருக்குப் பகிர்ந்து அளித்தார். 

நாட்கள் சென்றன. தசரதனின் இந்த மூன்று மனைவியர்களும் தாய்மைப்பேறு அடைந்தனர். உரிய காலத்தில் குழந்தைகளையும் பெற்றனர். இதில் கௌசல்யாவுக்கு ராமபிரானும், கைகேயிக்கு பரதனும், சுமித்திராவுக்கு இரட்டையரான லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோரும் அவதரித்தனர். தசரதன் பெற்ற மகிழ்வுக்கு அளவே இல்லை.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குழந்தைப் பேறு பெற உதவும் ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீண்ட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, அந்தப் பேற்றை அடைய விரும்பும் தம்பதியர், இங்கே வந்து ஹோமம் செய்து பிரார்த்தித்துச் சென்று பலன் அடைகிறார்கள். இதுபோல் பலருக்கும் பிரார்த்தனை பலித்துள்ளது. அப்படிக் குழந்தை பெற்ற தம்பதியர் தங்கள் குழந்தையை ஒரு சில மாதங்களுக்குப் பிறகு இங்கு அழைத்து வந்து, ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு நன்றி தெரிவித்து விட்டு, என்னிடம் அருட் பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். 
சுமார் ஒண்ணரை வருடங்களுக்கு முன் வேலூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் ஸ்ரீதன்வந்திரி பீடத்துக்கு வந்தனர். தங்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாத குறையை என்னிடம் சொல்லி அழுதனர்.

அவர்களிடம், ‘இங்கு நடக்கின்ற ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். பிரசாதத்தை வாங்கி உட்கொள்ளுங்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளால் உங்களுக்குக் கோடீஸ்வர குழந்தை வாய்க்கும்’ என்று சொன்னேன்.

அவர்களுக்குப் பிரமிப்பு. குழந்தை பிறக்கும் என்று சொன்னால், அதில் தவறில்லை. கோடீஸ்வரக் குழந்தை பிறக்கும் என்று சொன்னேன். இதுதான் அவர்களின் பிரமிப்புக்குக் காரணம். ‘எங்களுக்கு எப்படி சாமீ கோடீஸ்வரக் குழந்தை பிறக்கும்? நாங்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே?’ என்று கேட்டனர். ‘ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளால் எல்லாமே வாய்க்கும் அம்மா’ என்று சொல்லி, பிரசாதம் தந்து அனுப்பி விட்டேன்.

அண்மையில் அந்தத் தம்பதியர் இங்கே வந்தார்கள். அடையாளமே தெரியவில்லை. அந்தப் பெண்மணியின் கழுத்து, கைகளில் தங்க ஆபரணங்கள் மின்னின. கணவர் முகத்திலும் செழிப்பு. அவரது கையில் ஒரு குழந்தை; மனைவி கையில் ஒரு குழந்தை என இரட்டைக் குழந்தைகளுடன் வந்தனர்.

நேராக வந்து எனக்கு நமஸ்காரம் செய்தனர். பிறகு அந்தப் பெண்மணி சொன்னார் & ‘சாமீ... நீங்க சொன்ன மாதிரி குழந்தை பொறந்திடுச்சு. ஒண்ணு இல்ல சாமீ. ரெட்டை. குழந்தைங்க பொறந்த வேளை... என்னோட அப்பா பூர்வீக ஊர்ல இருக்கிற தன்னோட சொத்தை எல்லாம் பிரிச்சுத் திடீர்னு என் பேருக்கு அதிகமா எழுதி வெச்சுட்டார். இதுக ரெண்டும் இப்ப கோடீஸ்வரக் குழந்தைங்க’ என்று ஆனந்தக் கண்ணீருடன் சொன்னார்.

யோகப்படி எந்த வேளையில், என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நிச்சயம் நடந்தே தீரும். அது நிறைவேறுவதற்குச் சில பரிகாரமாக நாம் செய்வதே ஹோமம்!

(இன்னும் வரும்)


No comments:

Post a Comment